பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார். தமிழகம் வந்த அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
மதுரையின் பாஜகவின் பல்துறை வல்லுநர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெபி நட்டா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் உடன் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்த இடத்தை இன்று நேரில் பார்வையிட்டுள்ளார். அங்கு இன்னும் எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படாததை சுட்டிக் காட்டும் வகையில் ஒரு புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “பாஜக ஆட்சி, புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி நான் மற்றும் மாணிக்கம் தாகூர் போனோம்.
கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்” என பதிவிட்டுள்ளார்.