ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத பகுதிகளில், வரும் அக். 2ஆம் தேதி, கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சேலம் மாவட்டத்தில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள கிராமங்களைத் தவிர்த்து, மற்ற இடங்களில் கிராமசபைக் கூட்டங்கள் வரும் அக்.2ஆம் தேதி நடத்தப்படும்.
கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கிராமசபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும். அப்போது கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதிக்க வேண்டும்.
அதேபோல, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிராமத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய பணிகளை அடித்தட்டு மக்களின் நலன், பெண்களின் முன்னேற்றம், தடுப்பூசி போடுதல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வழிவகைகளைக் கண்டறிதல் குறித்து விவாதிக்க வேண்டும்.
மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பரப்புரை நடவடிக்கைகள், ஒவ்வொரு குக்கிராமத்திலும் துண்டு பிரசுரங்கள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்தலையும், பயன்படுத்துவதைத் தடை செய்தல், திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாத ஊராட்சிகளாக அறிவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2021 & 2022, பிரதமர் குடியிருப்பு திட்டம் (ஊரகம்); கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்பட உள்ளது. எனவே, கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்." இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.