Skip to main content

நாங்குநேரியில் சம்பவம்;  விளக்கம் கேட்ட தலைமை ஆசிரியையை தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியை

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Govt school teacher assaulted headmistress in Nanguneri

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா ஜெயசெல்வி என்பவர் வேதியியல் ஆசிரியையாக  பணியாற்றி வருகிறார். இவர் இந்த பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளிடம் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில், வழக்கம் போல், ஒரு மாணவியிடம் அவதூறாக பேசியுள்ளார். இதனால், மனமுடைந்து போன அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் பள்ளித் தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் இது குறித்து புகார் அளித்தனர். இது போன்று தொடர் புகார் வருவதால், இது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி தலைமை ஆசிரியை, ஸ்டெல்லாவிடம் கூறியுள்ளார். 

 

இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை ஸ்டெல்லா, தலைமை ஆசிரியையை அவதூறாக பேசி தாக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அவர் கழுத்தில் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியையும் ஸ்டெல்லா பறித்துள்ளார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர், ஸ்டெல்லாவிடம் இருந்த தங்கச் சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியை ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது.