Skip to main content

நாங்க படிக்க வந்தோமா? கக்கூஸ் கழுவ வந்தோமா? - கொந்தளிக்கும் மாணவர்கள்

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

govt school students were asked to clean  toilet causing stir  Thoothukudi

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரம் அருகேயுள்ள கிளவிபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்பகுதியின் 33 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசியர்கள் பணியில் உள்ளனர்.

 

இந்நிலையில் பள்ளியின் கழிவறையைச் சுத்தம் செய்ய மாணவர்களையே தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் சேர்ந்து கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது. மேலும் ஆசிரியர்கள் தாங்கள் கழிவறையைப் பயன்படுத்துவதற்காக மாணவர்களைத் தண்ணீர் எடுத்து வரச் சொன்னதாகவும் தெரிகிறது. மாணவர்களை அவதூறாகத் திட்டி வருவதாகவும், ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் செல்போனில் வீடியோ கேம் ஆடி வருவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன. இவை மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிய வர, ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இணைந்து பள்ளியைப் பூட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பள்ளிக்கு  வந்த ஆசிரியர்களை பள்ளிக்குள் விடாமல் போராட்டக் குரல் எழுப்பி வருகின்றனர்.

 

கோவில்பட்டி தொடக்கக் கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு, மற்றும் வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆரம்ப பள்ளி மாணவர்களின் இந்தப் போராட்டம் நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.