சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (02.02.2021) தமிழக சட்டப்பேரவை கூட்டம் துவங்கியது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது.
ஆளுநர் உரையானது, ''கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தை நிராகரிக்க மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தல். நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்குத் தேவையான நிதியை விரைந்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தவுள்ளோம். மத்திய அரசின் உதவிக்காக காத்திராமல், உரிய நேரத்தில் தமிழக அரசு விவாயிகளுக்கு நிதி வழங்கியுள்ளது. காவிரி - குண்டாறு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி -தெற்கு வெள்ளாறு இணைப்பின் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இலங்கை கடற்படை கப்பல் கொண்டு மோதியதில் நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்த நிகழ்விற்கு இலங்கை அரசை தமிழக அரசு வன்மையாக கண்டிக்கிறது'' என்றார்.
இந்நிலையில்,7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் உரை இடம்பெறவில்லை என சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது. “7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். ஆளுநரின் செயலைக் கண்டித்து கூட்டத்தொடர் முழுவதையும் திமுக புறக்கணிக்கிறது,” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.