தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் (ஏப்ரல் 18 மற்றும் 19) பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
ஆளுநரின் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக மரைக்காயர் பட்டினத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் நேற்று (18.04.2023) கலந்துரையாடினர். மேலும் பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து மாணவ மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஆளுநர் பார்த்து ரசித்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதிலளித்து பேசினார். அப்போது ஒரு மாணவர் ‘‘முன்பு நீங்கள் காவல்துறை உளவுப் பிரிவில் இருந்தீர்கள். இப்போது ஆளுநர் பதவியில் இருக்கிறீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள். இதில் எது உங்களுக்கு மனநிறைவை தருகிறது’’ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளுநர், ‘‘நான் வகிக்கும் பதவி எப்போது எனக்கு சலிப்பை ஏற்படுத்துகிறதோ... அப்போது என் பணியிலிருந்து விலகி விடுவேன்” என்று தெரிவித்தார்.