Skip to main content

ஆளுநர் ஆர்.என். ரவியின் சித்தன்னவாசல் பயணம் ரத்து

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Governor RN Ravi's visit to Siddhannavasal has been cancelled

நலதிட்ட உதவிகள் வழங்குதல், பட்டமளிப்பு விழா என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று (28.01.2024) முதல் நாகப்பட்டினம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்திற்கு சென்று கடந்த 1968 ஆம் ஆண்டு கீழ்வெண்மணியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்து உயிர் தப்பிய தியாகி பழனிவேலை (வயது 83) சந்தித்துப் பேசினார்.

மேலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 34 வது பட்டமளிப்பு விழா இன்று (29.01.2024) நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவரிடம் இருந்து 134 பேர் முனைவர் (Phd) பட்டமும், 184 பதக்கம் பெற்ற பட்டதாரிகள் என 348 பேர் நேரடியாக பட்டம் பெற்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு இன்று மதியம் 02.45 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆளுநரின் நேரமின்மை காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆளுநரின் வருகையை எதிர்த்து புதுக்கோட்டையில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பரிதாபமாக உயிரிழந்த பெண் ஆய்வாளர்; உடலைச் சுமந்து சென்ற எஸ்.பி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அலட்சியம் காட்டிய நகராட்சி; பரிதாபமாக பிரிந்த பெண் இன்ஸ்பெக்டரின் உயிர்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Woman inspector passed away due to unidentified speed breaker.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலைப்பணிகள் நடந்து முடியும் போது பல இடங்களில் தேவையில்லாமல் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. 

புதுக்கோட்டை - அறந்தாங்கி 30 கி.மீ சாலையில் 40க்கும் மேற்பட்ட வேகத்தடைகள், புதுக்கோட்டை - ஆலங்குடி  சாலையில் ஒரு கி.மீ உள்ளே இருக்கும் கல்லூரிகளுக்கு பிரதானச் சாலையில் பெரிய பெரிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எந்த வேகத்தடையிலும் வெள்ளைக்கோடு அடையாளம் இருப்பதில்லை. இதே போல புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்குள் அமைக்கப்படும் சாலைகளில் திடீர் திடீரென பல இடங்ளிலும் பெரிய பெரிய திண்ணைகள் போல வேகத்தடைகள் அமைத்துள்ளனர். 

இந்தப் புதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டாலும் அதற்கான அடையாளம் ஏதும் இல்லை. இதே போல பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் பழைய அரசு மருத்துவமனை பிரிவு சாலையில் 4 சாலைகள் இணையும் இடத்தில் உள்ள சிக்னல்கள் பல வருடமாக வேலை செய்யவில்லை. மேலும் அதே இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகத்தில் இருந்து வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஆனால்  வேகத்தடை அமைத்த இடத்தில் வெள்ளைக்கோடுகள் அடையாளமிடவில்லை. இதனால் அந்த வழியாகச் சென்ற பலரும் தவறி கீழே விழுந்து சென்றுள்ளனர். அதன் பிறகும் அதனை கவனிக்காத நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது.

Woman inspector passed away due to unidentified speed breaker

இந்த நிலையில் தான் திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா 7 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பணி முடிந்து இரவில் தனது குழந்தைகளைப் பார்க்க புதுக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். பேருந்து நிலையம் வந்த அவரது கணவர் ஆய்வாளர் பிரியாவை தனது புல்லட்டில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது அடையாளமில்லாத பெரிய வேகத்தடையில் பைக் ஏறி குதித்ததில் தடுமாறி கீழே விழுந்த ஆய்வாளர் பிரியாவின் பின்பக்க தலையில் பலத்த காயமடைந்தார். 

உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, திருச்சியில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரதானச் சாலையில் திடீர் வேகத்தடை அமைத்த நகராட்சி நிர்வாகம் அடையாளக் கோடுகள் போடாமல் அலட்சியமாக இருந்ததால் அந்த வேகத்தடையே காவல் ஆய்வாளரின் உயிரைக் குடிக்கும் எமனாக இருந்துவிட்டது. இதே போல நகரில் ஏராளமான ஆபத்தான வேகத்தடைகள் உள்ளது.

ஒரு பெண் ஆய்வாளர் வேகத்தடையில் விழுந்த பிறகு யாரோ கோலப் பொடி வாங்கிச் சென்று தூவியுள்ளனர். அதன் பிறகு நேற்று இரவு நகராட்சி சார்பில் வெள்ளைக் கோடு போட்டுள்ளனர். ஒவ்வொரு பணியின் போதும் காட்டப்படும் சிறியஅலட்சியங்கள் தான் இப்படி உயிர்ப்பலிகள் வரை கொண்டு செல்கிறது என்பது தான் வேதனை. இப்படி அலட்சியமாக இருந்து உயிர்பலியாக காரணமாக இருந்த நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் பெண் காவல் ஆய்வாளரின் நண்பர்களும், உறவினர்களும்.