Skip to main content

ஆளுநர் ஆர்.என் ரவியின் சர்ச்சை பேச்சு; கே.எஸ். அழகிரி கண்டனம்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Governor RN Ravi's controversial speech; K.S. Alagiri condemned

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், “நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை.  நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசி இருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஆளுநரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு வரலாற்றுத் திரிபு வாதங்களை செய்வதோடு, தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும், தமிழ் கலாச்சாரத்தை சிறுமைப்படுத்துகிற வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்தநாள் விழாவை ஆளுநர் மாளிகையில் கொண்டாடுகிற போர்வையில் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர்களையே கொச்சைப்படுத்துகிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார். அதில் அவர் பேசும் போது, ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை, நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் காரணம் என்று காந்தியடிகளை சிறுமைப்படுத்துகிற வகையில் காழ்ப்புணர்ச்சியோடு கருத்துகளை கூறிய இவரை இந்திய விடுதலைப் போராட்ட தேசபக்தர்களின் ஆன்மா மன்னிக்காது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை 1885 இல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. தென்னாப்பிரிக்க கருப்பு இன மக்களின் விடுதலைக்காக போராடி வரலாறு படைத்த மகாத்மா காந்தி 1915 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க முன்வந்த போது, அவரது தலைமையை நாடு ஏற்றுக் கொண்டது. அவரது வழிகாட்டுதலின்படி அகிம்சை வழியில் சத்தியத்தை கடைபிடித்து ஒத்துழையாமை இயக்கம், சத்தியாகிரகம் போன்ற போராட்ட வழிமுறைகளின் மூலம் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களை திரட்டியதில் மகாத்மா காந்தியின் பங்களிப்பை ஆயிரம் ஆர்.என். ரவிக்கள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது.

Governor RN Ravi's controversial speech; K.S. Alagiri condemned

மகாத்மா காந்திக்கும், சுபாஷ் சந்திர போசுக்கும் எத்தகைய உறவு இருந்தது என்பதை ஆர்.என். ரவி போன்றோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1938 இல் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளமை துடிப்புடன் செயல்பட்டு வந்த சுபாஷ் சந்திர போசை தலைவராக நியமிக்க பரிந்துரை செய்தவர் காந்தியடிகள். அதேபோல, 1939 இல் திரிபுரியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசை விட்டு வெளியேறியதோடு, இந்தியாவை விட்டு வெளியேறி ஆயுதம் ஏந்திய போராட்ட முறையை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பிரிட்டீசாரின் பகை நாடுகளின் தலைவர்களான ஹிட்லரையும், முசோலினியையும் சந்தித்து அவர்களது ஆதரவை பெற்று, ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்போடு இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அணுகுமுறை பலன் தரும் என்று அவர் நம்பினார்.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போர் தொடங்கிய போது சிங்கப்பூர் வானொலியில் மகாத்மா காந்தியின் வாழ்த்துகளை கோருகிற வகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பேசும் போது, ‘தேசப்பிதாவே எங்களை வாழ்த்துங்கள், இன்ப துன்பங்களிலும், வெற்றி தோல்விகளிலும் நான் உங்களுடன் இருப்பேன். இந்தியா விடுதலை அடைவதற்கு எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மனமுவந்து அளிப்போம்” என்று அவர் பேசிய உணர்ச்சிமிகு உரை, இந்தியா எங்கும் எதிரொலித்தது. அப்போது அவர்கள் பயன்படுத்திய கொடி என்பது காங்கிரஸ் மகாசபை ஏற்றுக் கொண்ட கைராட்டை சின்னம் பொறித்த மூவர்ண கொடி தான் என்பதை அரைவேக்காடு ஆர்.என். ரவி அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக சுபாஷ் சந்திரபோஸ் தொடுத்த போராட்டம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்ததை எவரும் மறுக்க முடியாது. ஆனால், இரண்டாவது உலகப் போரில் சுபாஷ் சந்திரபோசை ஆதரித்த நாடுகள் தோல்வியடைகிற நிலை ஏற்பட்ட போது, இவரது முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை அனைவரும் அறிவார்கள். 

150 ஆண்டு கால பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சையில் வழியில் போராடித் தான் வெற்றி பெற முடியும் என்ற மகாத்மா காந்தியின் அணுகுமுறை மூலமாகத் தான் இந்தியா விடுதலை பெற்றது. ஆனால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு வகிக்காமல், ஒரு துரும்பை கூட போடாமல் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக இருந்தவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்., இந்துமகாசபை வழிவந்த பாரதிய ஜனதா கட்சியினர். சுதந்திரம் பெற்று ஆகஸ்ட் 15, 1947 மற்றும் ஜனவரி 27, 1950-க்கு பிறகு ஜனவரி 26, 2022 வரை 52 ஆண்டுகள் நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்த தேசபக்தியே இல்லாத ஒரு பாசிச இயக்கம் தான் பா.ஜ.க. என்ற கரைபடிந்த வரலாற்றை எந்த சக்தியாலும் துடைக்க முடியாது. இதன்மூலம் ஆர்.என். ரவி போன்றவர்கள் செய்கிற வரலாற்று புரட்டுகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்