தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (12.02.2023) சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். பேரவைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
அதன் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஆளுநர் சட்டமன்றத்திற்கு வருவது இது தான் கடைசியாக இருக்கும். இனிமேல் ஆளுநர் சட்டமன்றத்திற்கு வருவதற்கு வாய்ப்பு கிடையாது. காரணம் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஆளுநரை தூக்கி எறிவார்கள். தமிழகத்தில் எப்போதும் எந்த நிகழ்ச்சியிலும், தேசிய கீதம் என்பது நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் இசைக்கப்படுவது வழக்கம். இதைக் கூட தெரியாத ஆளுநர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று சொல்வது அவரது அறியாமையை காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரையில் ஆளுநர் சட்டமன்றத்திற்கு வராமலேயே இருந்திருக்கலாம்” எனத் தெவித்தார்.