இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேனின் அலட்சியப் போக்கால் உயிர்ப்பலிகள் ஏற்படுவதாக வீரகுல தமிழர் படை மாநில ஒருங்கிணைப்பாளர் கீழை பிரபாகரன் தலைமையில் அரசு மருத்துவமனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பிரபாகரன், “கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு இரத்த காயத்துடன் சென்றால் மருத்துவர்களுக்கு மயக்கம் வந்துவிடுகிறது. உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள், முகத்தில் அடிபட்டால் முகக்கவசத்துடன் வாருங்கள், கீழே விழுந்து கை, கால்களில் அடிபட்டு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்றால் இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் டெக்னீசன் இல்லை என்கிறார்கள்.
இல்லை என்றால் இராமநாதபுரம் செல்லுங்கள் என்கிறார்கள். பிரசவ வலியோடு பெண் சென்றால் நான்கு பேர் என்றால் தான் பிரசவம் பார்ப்போம் ஒரு நபர் என்றால் இராமநாதபுரம் செல்லுங்கள் என்கிறார். இதைவிட மோசம் பிணவறை இங்கு மின்சார வசதியோ, குளிர்சாதன அறையோ கிடையாது, குளிர்சாதனப் பெட்டி இறந்தவரின் உறவினர்களே கொண்டுவர வேண்டும் என்கிறார்கள். ஆனால் குளிர்சாதன பெட்டி வைப்பதற்கு மின்சாரம் கிடையாது. பிணவறையில் எலி, பெருச்சாளிகள், பூரான்கள் துள்ளி விளையாடுகின்றன. அங்கு எப்படி இறந்தவரின் உடலை வைப்பது. குறிப்பிட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மருத்துவரோ, செவிலியர்களோ இருப்பது இல்லை.
முதலுதவி செய்ய வேண்டும் என்றால் கூட உயிர் போனவுடன் கரெக்ட்டாக வந்து அவர் உயிர் பிரிந்து விட்டது என்று கூறுவது, அவருக்கு முதலுதவிக்கு வருவது இல்லை. ஆனால் இறந்துவிட்டார் என கூற வந்து விடுகின்றனர். இதற்கெல்லாம் முழுக்காரணம் மக்களை மதிக்காத அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேனை இடமாற்றம் செய்ய வேண்டும். பிரசவம் பார்பதற்கு பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும். சிறு மழைக்கே தாங்காத கட்டிடத்தைப் பழுது பார்க்க வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் கோரிக்கை வைத்தார். மேலும் இதில் பெரியார் பேரவை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், வி.சி.க நகர் செயலாளர் பாசித் இலியாஸ், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நதீர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நாம், கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசேனிடம் கேட்டபோது அவர், “இதுவரை பொதுமக்கள் யாரும் என்னிடம் இப்படி புகார் சொன்னதில்லை. தவறுகள் ஏதாவது இருந்தால் மக்கள், சென்னையில் உள்ள தலைமையிடத்திற்கும் புகார் தெரிவிக்கலாம். ஆனால், இதுவரை யாரும் அப்படி புகார் தெரிவிக்கவில்லை. மேலும், இவர்கள் (போராட்டம் நடத்தியவர்கள்) மருத்துவமனைக்குள் வந்து பார்க்க வேண்டும். நான் என் பணியை முறையாகச் செய்துவருகிறேன்” என்று தெரிவித்தார்.