‘கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க.. இல்லனா உங்களுக்கு தான் கஷ்டம் ஆயிடும்.. புரிஞ்சதா’ என தொழிலாளர்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளின் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது அலங்கியம் கிராமம். இங்குள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தாராபுரம், அலங்கியம், தளவாய்பட்டினம், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட ஏழு இடங்களில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, தற்போது நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், அலங்கியம் அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்குமாறு சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் வற்புறுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், கடந்த 20 நாட்களாக அரசு அதிகாரிகளுக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்காக தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது, விவசாயிகளிடம் யாரும் லஞ்சம் வாங்கக் கூடாது என உடன்பாடு ஏற்பட்ட நிலையில், நெல் கொள்முதல்கள் சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் 40 கிலோ நெல் மூட்டைக்கு பத்து ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் லஞ்சம் தர மறுத்ததால், தொழிலாளர்களிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், அலங்கியம் அரசு கொள்முதல் நிலையத்தில் உள்ளூர் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பதிலாக வடமாநிலத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இத்தகைய சம்பவங்களால் கடந்த 2, 3 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருப்பதால் நெல்மணிகள் குவியல் குவியலாகத் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், லஞ்சம் கேட்கும் அதிகாரிகளின் செல்போன் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிவாஜி