ஈரோடு மாவட்டம், கோபி அருகே கேசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர், ஆயுள் காப்பீட்டு முகவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், ஸ்ரீதர், சுதர்சன் என்ற மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு (19-02-24) நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் அவர்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணி போல், நடராஜன் கழிவறைக்கு சென்ற போது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அப்போது, ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த காஞ்சனா, மர்ம நபர் வீட்டின் உள்ளே நுழைவதை பார்த்து சத்தமிட்டுள்ளார். இதனால், பதற்றமடைந்த அந்த நபர், காஞ்சனாவின் கழுத்தை நெறித்தும், கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். காஞ்சனாவின் அலறல் சத்தத்தை கேட்ட நடராஜனும், அவரது மகன்களும் வெளியே வந்த போது, மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து நடராஜன், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்த கடத்தூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது, அந்த பகுதியில் மர்ம நபர் அணிந்திருந்த முகமூடி, டி-ஷர்ட், கையுறை போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, அந்த மர்ம நபரை பிடிப்பதற்காக தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே, நடராஜனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் தயானந்த், மோப்ப நாய்கள் வருவதை அறிந்து அங்கிருந்து நைசாக தப்பிச் சென்றார்.
இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர், தயானந்தின் செல்போன் எண்ணை வைத்து, அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய முயற்சி செய்தனர். அப்போது, தயானந்த் அவரது உறவினர்கள் வீட்டில் இருப்பதை அறிந்த காவல்துறையினர், தயானந்தை அழைத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தன.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தயானந்த் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக பணி புரிந்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்த தயானந்த், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியத் தொகையை கையாடல் செய்தும், பலருக்கும் மானியத் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை பெற்று ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, உதவி இயக்குநர், தயானந்த்திடம் நடத்திய விசாரணையில், தான் கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், கையாடல் செய்த பணத்தை மூன்று மாத காலத்திற்குள் ஒப்படைப்பதாகவும், அதற்கு மூன்று மாதம் சம்பளம் இல்லாத வேலை வழங்குமாறு தயானந்த் கூறியுள்ளார். இதற்கு உதவி இயக்குநர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, சத்தியமங்கலம் பகுதியில் அறை எடுத்து தங்கி, கொள்ளை அடிப்பது எப்படி என்பது குறித்து செல்போன் மூலம் தகவல் அறிந்துள்ளார். இதற்கிடையே, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நடராஜன், சொத்து ஒன்றை விற்று ரூ.90 லட்சம் பணத்தை வீட்டில் வைத்துள்ளார் என்பதைத் தெரிந்துகொண்ட தயானந்த், அவரது வீட்டில் கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, துணிக்கடைக்கு சென்று முகமூடி, கையுறை போன்றவற்றை தயானந்த் வாங்கியுள்ளார். இந்த நிலையில், நடராஜன் வீட்டில் எங்கு சிசிடிவி கேமரா பொறுத்தியிருக்கிறது என்பதை ஏற்கெனவே தெரிந்திருந்த தயானந்த், சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு நேரத்தில் நடராஜன் வீட்டிற்கு கேமரா காட்சி பதிவாகாதவாறு சென்று திருட முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது. விவசாயிகளின் மானியத் தொகையை கையாடல் செய்த பணத்தை திருப்பிக் கொடுக்க தோட்டக்கலைத்துறை இளநிலை உதவியாளர், பக்கத்து வீட்டில் திருட முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.