Skip to main content

கிராமிய கலையைக் கற்றுத்தர அரசு புதிய முயற்சி; மகிழும் நாட்டுப்புற கலைஞர்கள்!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Government new initiative to teach rural art

வட தமிழ்நாட்டில் தெருக்கூத்து பிரபலம், கொங்குமண்டத்தில் வள்ளிக்கும்மி பிரபலம், மத்திய மண்டல மாவட்டங்களில் சாமியாட்டம், கரகாட்டம் பிரபலம். தென்மாவட்டங்களில் வில்லுப்பாட்டு, கரகாட்டம், கிராமியப்பாட்டு பிரபலம். ஒரு காலத்தில் ஆடி மாதம் வந்தாலே தெருக்கூத்து நடைபெறாத வடமாவட்டங்களே இருக்காது. பிறந்தநாள் விழாவுக்கு கிருஷ்ணர் பிறப்பு கூத்தும், ஒருவர் இறந்துவிட்டாள் கர்ண மோட்சம் நாடகமும் நடத்துவார்கள். திருவிழா நடைபெறும் நாட்களில் கொங்கு மண்டல மாவட்ட கிராமங்களில் வள்ளி கும்மி ஆட்டம் ஆடுவார்கள். இப்போது திருவிழா என்றாள் அறைகுறை ஆடைகளுடன் மேடை நடனங்களும், இசைக்கச்சேரிகளும் சிறிய கிராமங்கள் வரை நடக்கின்றன.  

இதனால் எங்காவது நாட்டுப்புற கலைகள் நடந்தால் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர் இன்றைய இளம் தலைமுறையினர். இதனால் நாட்டுப்புற கலைஞர்கள் வழக்கொழிந்து வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் நாட்டுப்புற கலைஞர்களுக்கு சரியான ஊதியம் இல்லை என்பதாகும். அதே நேரத்தில் இந்த கலைகளை கற்று தருவதற்கான பயிற்சி மையங்கள் என்பது தமிழ்நாட்டில் அந்தளவுக்கு இல்லை என்பது குறிப்பிடதக்கது. இரண்டு, மூன்று பேர் மட்டுமே இதற்கான பயிற்சி தருகிறார்கள். மற்றப்படி பார்த்தும், கேட்டும் கற்றுக்கொள்ளும் கலைகளாகவே இவை இருக்கின்றன.

பரதநாட்டியத்துக்கு கல்லூரிகள், இசை பயிற்சி கூடங்கள் இருப்பதுப்போல் நாட்டுப்புற கலைகளுக்கு இல்லை. தெருக்கூத்து, நாடகம் போன்றவற்றுக்கு ஒரு சிலர் மட்டும் பயிற்சி பள்ளி வைத்து நடத்துகிறார்கள். மற்றபடி தெருக்கூத்து கற்றுக்கொள்ள வேண்டும், கோல்கால் ஆட்டம் ஆடவேண்டும், புரவியாட்டம் ஆடவேண்டும், வள்ளிக்கும்மி ஆடவேண்டும், கோல்கால் ஆட்டம் ஆடவேண்டும் என ஆசைப்படுபவர்களுக்கு கற்றுத்தர பயிற்சி மையங்கள் இல்லை என்கிற ஏக்கம் இருந்துவந்தது.

இது குறித்த கோரிக்கை கலைபண்பாட்டுத்துறைக்கு அமைச்சராகவுள்ள செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. அது குறித்து அதிகாரிகள் மற்றும் அறிஞர்களுடன் நடந்த கலந்தாலோசனையில் தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்ட இசைப்பள்ளிகள், 5 இசைக்கல்லூரிகள், 3 மையங்களில் கிராமிய கலைகள் கற்றுத்தரலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து அதிரடியாக தகவல்கள் இசைக்கல்லூரி, இசைப்பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வட தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தெருக்கூத்து கலை பிரபலம் என்பதால், தெருக்கூத்து, பெரியமேளம், பம்பை, கிராமிய பாடல்கள் பாடுவது குறித்த பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் வில்லுப்பாட்டு கரகாட்டம், கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் வள்ளிக்கும்மி, துடும்பாட்டம், காவடியாட்டம், ஜிக்காட்டம், கோல்கால் ஆட்டம், புரவியாட்டம், டெல்டா மாவட்டங்களில் புலியாட்டம், கரகாட்டம், சாமியாட்டம், தப்பாட்டம் கற்றுத் தருவதற்கான பயிற்சி வகுப்புகள் கடந்த வாரத்தில் தொடங்கப்பட்டு உள்ளன.

இதற்காக திறமையான நாட்டுப்புற கலைஞர்களை கலை பண்பாட்டுத்துறையினர் தேர்வு செய்து அவர்கள் மூலமாக பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சி என்கிற தலைப்பில் வாரத்தில் வெள்ளி – சனிக்கிழமை இரண்டு நாள் மட்டும் நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியில் 17 வயது நிரம்பிய யாரும் சேரலாம், அதிகப்பட்ச வயது வரம்பில்லை. பள்ளி படிப்பு 8 வது படித்து முடித்திருந்தால் தேர்வு எழுதவைக்கப்படுவர். படிக்கவில்லை என்றால் தேர்வு இல்லை. ஆனால் இருவருக்குமே சான்றிதழ் தருவோம் எனச்சொல்லப்பட்டுள்ளது. கிராமிய கலைகளை வளர்க்க தமிழ்நாடு அரசு திடீரென எடுத்துள்ள முயற்சி நாட்டுப்புற கலைஞர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. 

சார்ந்த செய்திகள்