திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் வழங்கப்படும் 2000 ரூபாய் மற்றும் அவர்களை பராமரிக்கும் பராமரிப்பாளர்களுக்கான செலவு என மொத்தம் 3 ஆயிரம் ரூபாயாக மாற்றுதிறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கான முகாம் நடைபெற்ற நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் வந்திருந்தனர். ஆனால் அங்கே அவர்களுக்கு முறையான வசதிகள் ஏதும் செய்து தரப்படாமல் மாற்றுத்திறனாளிகள் எனக் கூட பாராமல் டோக்கன் வழங்கும் இடம். மனு வாங்கும் இடம். மற்றும் மருத்துவர்கள் பார்க்கும் இடம் என அனைத்து இடங்களிலும் நீண்ட வரிசையில் அவர்களை நிற்க வைத்து சுமார் அரை மணி நேரம் வரை காக்க வைத்து மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
மேலும் அவர்களுக்கான குடிநீர், கழிவறை மற்றும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரும் வீல் சேர் உள்ளிட்டவைகள் ஏதும் ஏற்பாடுகள் செய்யாமல் அங்கே இருந்த ஓரிரு வீல் சேர்களை வைத்துக் கொண்டு கணக்கு காட்டுவதாகவும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதாகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளை தங்களால் பேருந்து உள்ளிட்டவைகளில் அழைத்து வருவதில் சிரமம் இருப்பதாகவும், தங்கள் பகுதிகளிலேயே முகாம் வைத்து அதற்கான சான்றிதழ் வழங்கினால் நன்றாக இருக்கும் என மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் கண்ணீர் மல்க அழுது புலம்பிய காட்சிகள் சக மனிதர்களையும் கண்ணீர் வரவைப்பதாக இருந்தது.
மேலும் 300க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வந்திருந்த நிலையில் அவர்களை வரிசையாக அமர வைத்து மருத்துவர்கள் அவர்களை வந்து பார்க்கலாம் அது தான் நன்றாக இருக்கும் எனவும், ஆனால் இங்கு மருத்துவர்கள் அறையில் அமர்ந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை அவர்கள் இருக்கும் அறைக்கு அழைத்து பார்த்து உறுதி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனி வரும் காலங்களிலாவது மாற்றுத் திறனாளிகளை மரியாதையோடும், மனிதாபிமானத்தோடும் அதிகாரிகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளது.
இந்நிலையில் ஆவடி பகுதியில் இருந்து வயதான மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் தனது மகனை அழைத்து வர முடியாத நிலையிலும் அதிகாரிகள் வற்புறுத்தலின் பேரில் வாடகை ஆம்புலன்ஸில் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காக்க வைக்கப்பட்டு அவரிடம் நூறாவது டோக்கன் வழங்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதை அடுத்து செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கச் சென்ற நிலையில் உஷார் ஆன அதிகாரிகள் ஆம்புலன்சில் வந்த மாற்றுத்திறனாளியை உடனடியாக பார்த்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.