மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில். தமிழகத்தில் நாடாளுமன்ற. சட்டமன்ற இடை தேர்தல்கள் நடந்துமுடிந்துள்ளது. 46 இடங்களில் வாக்களிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று கூறிய தேர்தல் ஆணையம் 13 இடங்களில் மட்டும்தான் மறு தேர்தல் நடைபெற உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் வாக்களிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது தேர்தல் ஆணையம் முன்னுன்னு பின்னாக பேசி வருகிறது.
தேர்தல் ஆணையம் முறையான வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவாதப்படுத்த வேண்டும். தில்லுமுல்லு செய்தாவது வெற்றி பெற்றுவிடலாம் என்று தமிழக முதல்வர், துணை முதல்வர் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் ஆணையமும் கைப்பாவையாக செயல்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை அச்சமான சூழ்நிலையே உள்ளது. தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை தலைதூக்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடந்து இருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகள் ஈடுகொடுத்து சரி செய்து இருப்பார்கள். தற்போது மக்கள் குடிநீருக்கு அகதிகள் போல் அலைகிறார்கள். வரும் 23 ஆம் தேதி பிறகு ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும்.
மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது மக்களின் கருத்து கேட்பு, சுற்றுச்சூழல், வன பாதுகாப்பு உள்ளிட்ட எந்த சட்ட திட்டங்களையும் பின்பற்றாமல் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும். மற்ற நாடுகளில் மக்கள் வாழும் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல் படுத்த வில்லை. இங்கு மக்கள் வாழும் பகுதியில் மக்களை அழித்து இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் 5 முதல் 10 ஆம் தேதி வரை 6 நாட்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யவலியுறுத்தியும் திட்டத்தில் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கும் வகையில் டெல்டா பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளது. இதில் அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீட்டிலுள்ள பெண்கள் பாலியல் மற்றும் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மாணவி கொலையில் ஆகாஷ் என்ற இளைஞரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளார்கள். இது சமூக வலைதளங்களில் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர் ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. பின்னர் கைது செய்யப்பட்ட ஆகாஷ் தரப்பில் மாணவியும், நானும் காதலித்தது உண்மைதான் ஆனால் கொலை செய்ய அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்கள். எனவே காவல்துறையினர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக அரசு குடும்பத்திற்கு நிவாரண உதவி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும் ஆனால் மேட்டூரில் இருக்கும் தண்ணீரை குடிநீருக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். காவிரி ஆணையத்தை கூட்டி தென்மேற்கு பருவ மழை பெய்யும் போது நமக்கு சேர வேண்டிய தண்ணீரை கேட்டு பெற்று குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்க எந்த அக்கறையும் காட்டவில்லை. கோடை காலங்களில் நீர்நிலைகளை தூர்வாரி, மராமத்து பணிகள் செய்து இருந்தால் பெய்யும் மழைநீரை சேமித்து வைக்கலாம். யாகம் நடத்தினால் மழை வரும் என்பதை சொல்வதற்கு அரசு அதிகாரிகள் எதற்கு? எல்லா பிரச்சினைக்கும் யாகம் வளர்த்து சரி செய்து இருக்கலாமே என கேள்வி எழுப்பினார். அப்படியே மழை வந்தாலும் கடலுக்கு தானே அந்த தண்ணீர் செல்லும் பொறுப்பற்ற நிலையில் அரசு நடந்து கொள்கிறது.
சுதந்திர போராட்ட வீரர் நல்லகண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர் கக்கன் பேரன் ஆகியோரின் வீடுகளை அரசு காலி செய்யும் முன் மாற்று வீடு கொடுத்துவிட்டு காலி செய்து இருக்க வேண்டும். அவர்களுக்கு உடனே வீடு வழங்க வேண்டும். இதனை நிதானமாக அரசு கையாள வேண்டும். புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தைரியமாக முதல்வர் நாரயணசாமி அறிவித்துள்ளார் ஆனால் தமிழக முதல்வர் பழனிச்சாமி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஆமாம் சாமி போட்டு வருகிறார். இவர் மட்டுமல்ல இவர்கள் கூட்டணியில் உள்ள அனைவரும் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் ஆமாம் சாமியாக உள்ளனர். இவர்களது தேர்தல் அறிக்கையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு மோடியிடம் உரலில் மாட்டிய தலை போல் உள்ளனர்.
ஒரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு ரூ150 கோடி வரை செலவு செய்கிறார்கள் இதில் ஜனநாயகம் இல்லை., பணநாயகமாக உள்ளது. அப்படியே ஆட்சி இருந்தாலும் ஒன்றரை வருடம் தான் அதுவும் 23ம் தேதிக்குப் பிறகு மாறக் கூடிய சூழல் உள்ளது. தேர்தலுக்கு செலவு செய்யும் ரூ 150 கோடி ரூபாய் வைத்துக் கொண்டு அத்தொகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை செலவு செய்தாலே மக்கள் சிறப்பாக வாழ்வார்கள் என பேசினார் இவருடன் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கற்பனை செல்வம், நகர செயலாளர் ராஜா, மாவட்டக்குழு முத்து, சிஐடியு ஆட்டோ சங்க கிளை செயலாளர் தியாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.