திருச்சி மாவட்டம், அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் நகர், தேவர் தெருவில் வசிக்கும் ஒருவரை, ராகவேந்திரன் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டிய புகாரில் அரியமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த காவல்துறையினர், திருச்சி மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.
மேலும், நடத்திய தொடர் விசாரணையில் ராகவேந்திரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, ராகவேந்திரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியமங்கலம் காவல் ஆய்வாளர், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயனிடம் அறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கையினைப் பரிசீலனை செய்து, ராகவேந்திரனைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையர் ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் இருக்கும் ராகவேந்திரனிடம் குண்டர் தடுப்பு சட்டம் ஆணை சார்வு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.