சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியைச் சோதனை செய்தபோது பசை வடிவில் மூன்று கட்டிகளை மலக்குடலில் மறைத்து வைத்துக்கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 745 கிராம் என்றும், அதன் மதிப்பு சுமார் 36.54லட்சம் ரூபாய் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் துபாயிலிருந்து திருச்சி வந்த மற்றொரு விமானத்தில் வந்த பயணிகளைச் சோதனை செய்ததில் ஒருவரிடமிருந்து சிலிண்டர் வடிவிலான உருளை வடிவில் 15 தங்கக் கட்டிகளும், E வடிவிலான 26 தங்கத் துண்டுகளும், I வடிவிலான 25 தங்கத் துண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் மதிப்பு ரூ.15.33லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் சார்ஜாவில் இருந்து வந்த பயணிகளைச் சோதனை செய்ததில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 7 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.