திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள திமுக கட்சிக்காரர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடினார்கள். திண்டுக்கல் மாநகரில் உள்ள 48 வார்டுகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநகர மேயர் இளமதி, மாநகரத் துணை மேயர் ராஜப்பா தலைமையில் மாநகர பகுதி செயலாளர்களான ராஜேந்திரகுமார், ஜானகிராமன், அக்கு.சந்திரசேகர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர், கவுன்சிலர் பிலால், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் அனைத்து பகுதிகளிலும் கொடியேற்றி அப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு இனிப்புகளை கொடுத்து கொண்டாடினார்கள்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு எத்தனை குழந்தைகள் பிறக்கிறதோ அத்தனை குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று ஏற்கனவே மாநகர செயலாளரும், துணை மேயருமான ராஜப்பா அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்று பிறந்த 13 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை துணை மேயர் ராஜப்பா உள்பட கட்சி பொறுப்பாளர்கள் வழங்கினார்கள். அதோடு குழந்தைகளுக்கு பரிசு பொருட்களும், தாய்மார்களுக்கு பழங்களும் வழங்கினார்கள். பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானமும் வழங்கினார்கள். இப்படி நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கட்சித் தொண்டர்களும், பொறுப்பாளர்களும் கொண்டாடினார்கள்.