பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் சம்பந்தமாகவும், அடுத்து வரவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்துவது குறித்தும் அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் முதன்மைக் கல்வி அதிகாரிகள் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பெண் கல்வி அதிகாரி தமது காரில் வந்து இறங்கினார். காணொளி காட்சி நடைபெறும் அரங்கிற்குச் சென்றவர் சிறிது நேரம் கழித்து தற்செயலாகத் தன் காலில் அணிந்திருந்த கொலுசுகளைப் பார்த்துள்ளார். அதில் ஒரு காலில் இருந்த ஒன்றரை சவரன் தங்கக் கொலுசு காணாமல் போயிருந்ததைக் கவனித்த அந்தப் பெண் அதிகாரி, திடுக்கிட்டு பரபரப்புடன் அங்கும் இங்கும் தேடினார்.
இவரது பரபரப்பைக் கண்டு மற்ற அதிகாரிகள் அலுவலர்கள் என்னவென்று விசாரிக்க காலில் இருந்த தங்கக் கொலுசைக் காணவில்லை என்று கூறி கண் கலங்கியுள்ளார் பெண் அதிகாரி. அவர் நடந்து சென்ற அலுவலக வளாக பகுதிகளிலும் மற்றும் அவர் வந்த கார் உட்பட பல இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். இருப்பினும் கொலுசு கிடைக்கவில்லை. இச்சம்பவம் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது பிறகு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது