சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பி.இ. பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 23.6.2015ம் தேதி திருச்செங்கோடு மலைக்கோயிலில் வைத்து கடத்திச் சென்று கொலை செய்து தலை வேறு உடல் வேறாக நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
2015 ஆம் ஆண்டு கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி யுவராஜ் உட்பட 10 பேருக்கு மதுரை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருந்தது. அதன் பிறகு யுவராஜ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியாக மாறியதை அடுத்து திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்துவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் திருச்செங்கோடு கோவிலுக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.