Skip to main content

ஒரே நேரத்தில் 34 ஆடுகள் திருட்டு...வாழ்வாதாரம் போச்சே...கண்ணீர் விடும் மூதாட்டி!

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

goats incident police investigation in pudukkottai district

 

புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல வருடங்களுக்கு முன்பு  வயல்வெளியில் கிடையில் அடைக்கப்பட்டிருக்கும் செம்மறி ஆடுகளை மொத்தம் மொத்தமாக லாரிகளில் திருடிச் சென்றனர். இப்படி கூட்டம் கூட்டமாக திருடப்படும் செம்மறி ஆடுகள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள முந்திரிக்காடுகளில் நிற்கும். முடிந்தவர்கள் ஆடுகளை மீட்டனர். முடியாதவர்கள் இழந்து போனார்கள்.

 

கடந்த சில வருடங்களாக மொத்தமான ஆடு திருட்டுகள் குறைந்து, விவசாயிகள் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளை திருடிச் செல்லும் பலர் உருவாகிவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு படை அமைத்து சிறிதளவு ஆடுகள் மீட்கப்பட்டாலும், கூட தொடர் திருட்டுகள் இன்றுவரை குறையவில்லை. வீடுகளில் ஆடுகளை திருடுவோர் அங்கு நிறுத்தி இருக்கும் பைக் பிளக் வயர்களை துண்டித்துவிட்டு திருடிச் செல்லும் நூதன வேலைகளையும் செய்கின்றனர்.

 

இன்று புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல் சரகம் ஆவணம் பெருங்குடி கிராமத்தில் ஆரோக்கியசாமி - மதனமேரி தம்பதி தங்களின் வாழ்வாதாரத்திற்காக 38 செம்மறி ஆடுகள் வளர்த்து வந்தனர். போன வாரம் பக்கத்து ஊர் வியாபாரியும் அறந்தாங்கி வியாபாரியும் வந்து குறைந்த விலைக்கு கேட்டதால், ஆடுகளை விற்காத வயதான தம்பதி இன்று அதிகாலை 02.00 மணி வரை விழித்திருந்து காவல் காத்துவிட்டு அதன் பிறகு வீட்டிற்குள் தூங்கிவிட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் எழுந்து பார்த்த போது கிடையின் கதவு திறந்து கிடக்க 38 ஆடுகளையும் காணவில்லை.

 

ஆடுகள் காணாமல் முதியவர்களின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து தேடிய போது 2 கி மீ தாண்டி புதருக்குள் 4 ஆடுகள் பதுங்கிக்கிடந்தது. மற்ற 34 ஆடுகளும் காணவில்லை.

 

நன்கு விபரமறிந்த திருடர்கள் பொலிரோ சரக்கு வாகனத்தில் வந்து தூரத்தில் நின்று கொண்டு கிடையில் ஆள் இல்லை என்பதை தெரிந்து கொண்டு கிடையின் தட்டிக் கதவை  திறந்ததும் மேய்சலுக்கு போறது போல அத்தனை ஆடுகளும் சத்தமில்லாமல் வெளியே செல்ல குறிப்பிட்ட தூரத்தில் ஆள் இல்லாத இடத்தில் வைத்து மொத்த ஆடுகளையும் அள்ளிச் சென்றுள்ளனர்.

 

வாழ்வாதாரம் இழந்து கஞ்சி தண்ணீர் இன்றி கதறிக் கொண்டிருக்கும் முதிய தம்பதி மீமிசல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போனவாரம் ஆடுகள் வாங்குவது போல வந்து கிடையை பார்த்துச் சென்றவர்களை அழைத்து விசாரித்தால் உண்மை தெரிய வாய்ப்புள்ளது என்கிறார்கள் கிராம இளைஞர்கள். இப்படி மீண்டும் தொடர்ந்துள்ள ஆடுகள் திருட்டிற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி வைப்பார்களோ.. பாவம் ஏழை கிராமத்து மக்கள்.


 

சார்ந்த செய்திகள்