ராணிப்பேட்டை மாவட்டத்திலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கும் ராணிப்பேட்டை வாரச்சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் கூட வாகனங்கள் மூலம் ஆடுகள் கொண்டுவரப்பட்டு விடியற்காலை 5 மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜீன் 17ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடப்படவுள்ள பக்ரீத் குர்பானி பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வெள்ளாடு, செம்மறி ஆடு, என சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஆடு வளர்ப்பவர்கள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு சந்தையில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர், அதேபோல் வியாபாரிகளும் வந்து குவிந்துள்ளனர். ஆடுகள் உடல் எடை மற்றும் ரகங்களுக்கு ஏற்றவாறு 5 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுகிறது.
இதில் இறைச்சி கடைகளின் வியாபாரிகள் மற்றும் இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி பிற மக்களும் ஆர்வத்துடன் வருகை தந்து ஆடுகளை வாங்கி சென்றதால் ஆடுகள் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமான வாரங்களை காட்டிலும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு அதிகளவில் ஆடுகள் கொண்டுவரப்பட்டு வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இந்த வார சந்தையின் முடிவு நேரமான பிற்பகல் 1 மணிக்குள்ளாக சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேலாக இன்று விற்பனை நடைபெறும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.