தஞ்சாவூரில் கட்டப்பட்டுள்ள காமராஜ் சந்தையில் தங்களுக்கு கடை ஒதுக்கக் கூறி கட்டணம் செலுத்திய பின்னரும் மாநகராட்சி தங்களை ஏமாற்றிவிட்டதாக திருநங்கைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை காமராஜ் சந்தையில் 220 கடைகள் கட்டப்பட்டது. இவை அனைத்தும் வாடகைக்கு விடப்பட்டது. இதில் ஒரு கடையை தங்களுக்கு விடுமாறு திருநங்கைகள் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மாத வாடகையாக 15 ஆயிரம் என்பதன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கான வாடகைப் பணம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளதாகவும் திருநங்கைகள் கூறுகின்றனர். ஆணையர் கூறியதன் பேரிலேயே பணத்தை செலுத்தியதாகவும் தற்போது கடையை ஒதுக்காமல் ஆணையரும், மேயரும் தங்களை அலைக்கழிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் குற்றம் சாட்டி மனு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருநங்கைகள், “நாங்கள் ஆணையரை பார்த்தோம். அவர் மேயரை பார்க்க சொன்னார். மேயரை பார்த்தால் ஆணையரை பார்க்க சொல்லுகிறார். நாங்கள் யாரையும் குறை சொல்லவில்லை. பிச்சை எடுக்காமல் பாலியல் தொழில் செய்யாமல் சுயமரியாதையுடன் வாழ ஒரு கடை கேட்கிறோம். இல்ல, நீங்க பிச்ச தான் எடுக்கனும்னு நினச்சீங்கன்னா எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்” எனக் கூறினார்.