சென்னை வளசரவாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக ரகசியத் தகவலின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர். அதில், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் முதியவர் தனக்கு திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்தான் பள்ளி மாணவியை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், அவருடன் பணம் கொடுத்து உல்லாசமாக இருந்ததாகவும் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாலியல் தடுப்பு பிரிவு போலீஸார் சந்தேகத்தின் பேரில் 37 வயதான திவ்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பள்ளியில் படிக்கும் மாணவிகளைத் தனது மகள் மூலம் திவ்யா பாலியல் தொழிலுக்கு அழைத்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, பாலியல் தடுப்பு போலீசார் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய தேனாம்பேட்டையைச் சேர்ந்த திவ்யா, அவருக்கு உதவிய அவரது உறவினர் ராமச்சந்திரன், திவ்யாவின் சகோதரி சுமதி, மறைமலை நகரைச் சேர்ந்த விஜயலட்சுமி உள்ளிட்ட 8 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கடந்த ஓராண்டாகச் செயல்பட்டு வந்த இந்தக் கும்பல் 17 பள்ளி மாணவிகளையும், 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளையும் பாலியல் தொழிலுக்குத் தள்ளியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிய வழக்கில் சந்தேகத்தின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திவ்யாவின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், கைப்பற்றப்பட்ட 5 செல்போன்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அந்த செல்போன்களில் சிறுமிகளின் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். அதன் விளைவாகத்தான் திவ்யா சிக்கியதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட நதியா, ராமச்சந்திரன், தண்டபாணி, மாய ஒலி ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.