திருப்பூரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். தினந்தோறும் இன்ஸ்டாகிராம் சேட்டிங்கில் பேசி வந்த சிறார்களுக்கு இடையே ஒரு கட்டத்தில் நட்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இருவரும் சேட்டிங்கிலேயே தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். இப்படி, நாட்கள் மாதங்களாக அதிகரிக்க இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இன்ஸ்டா ஸ்டோரியில் காதல் ஸ்டோரியாக தேர்ந்தெடுத்து இருவரும் காதல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறுமி தன்னிடம் சிறிய அளவிலான செல்போன் தான் உள்ளது, தனக்கு வசிதிகள் நிறைந்த செல்போன் ஒன்று வேண்டும். அதை வாங்கித்தர முடியுமா? என்று காதலனிடம் ஏக்கத்துடன் கேட்டுள்ளார். அதற்கு, சிறுமியிடம் இன்ஸ்டா சேட்டிங்கில் பதில் அளித்த காதல் சிறுவன், தன்னிடம் பணம் இல்லை என்றும், வேலைக்கு சென்றால் முதல் சம்பளத்தில் உனக்கு தான் செல்போன் என்று கூறியுள்ளார். இருப்பினும், தொடர்ந்து சிறுமியிடம் சேட்டிங் செய்த சிறுவன், வேண்டுமென்றால் உனக்கு புது செல்போன் வாங்க ஐடியா கொடுக்கவா? என்று கேட்டுள்ளார். அதற்கு என்ன ஐடியா என்று சிறுமி கேட்க, அவரின் குடும்ப பொருளாதார நிலை நன்கு அறிந்த சிறுவன், 'நீ வேண்டும் என்றால் பணம் கொண்டுவா? நானே உனக்கு நல்ல செல்போனாக வாங்கித் தருகிறேன்..' என்று கூறியுள்ளார். அதோடு, உன்னை நேரில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் என்றும் காதலை சேட்டிங்கில் அந்த சிறுவன் கொட்டியுள்ளார். இன்ஸ்டா காதலன் கூறிய ஆசை வார்த்தைகளைக் கேட்டு மயங்கி சிறுமி, வீட்டில் பணம் கேட்டால் சிக்கிக் கொள்வோம் என்று அறிந்து திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்.
அதன்படி, தனது தாயின் 7 பவுன் நகையை வீட்டில் இருந்து திருடிக்கொண்டு பேருந்தில் ஏறி காதலனைப் பார்க்க திருப்பூர் மத்திய பஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு, காதலியை காண முன்கூட்டியே சிறுவன் காத்திருக்க இருவரும் இன்ஸ்டாகிராம் பழக்கத்திற்கு பிறகு ஒன்றாக நேரில் சந்தித்துக் கொண்டு காதலைப் பரிமாறியுள்ளனர். பிறகு, சிறுமி திருடிக் கொண்டு வந்த தாயின் நகையைக் காதலனிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய சிறுவன் அடகு கடையில் நகையை விற்று அதன் மூலம் பணத்தை உடனே திரட்டி இருக்கிறார். பின்னர், சிறுமிக்கு 1 லட்சம் ரூபாயில் ஐபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதேசமயம் சமயோசிதமாக செயல்பட்ட காதல் சிறுவன் தனக்கும் அதே விலையில் மற்றொரு ஐபோனை சிறுமியின் பணத்தில் வாங்கியுள்ளனர். அதன் பின்னர், இருவரும் ஐபோனை அன் பாக்ஸிங் செய்த கையோடு திருப்பூரில் ஒன்றாகச் சுற்றி நேரத்தை கழித்துள்ளனர். பிறகு நேரம் கடந்ததால் வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், வீட்டிலிருந்த நகை காணாமல் போயிருப்பதை கண்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். நகை வீட்டில் வேறு எங்கும் இருக்கிறதா? என்று தேடும்போது சிறுமி அறையில் புது ஐபோனைபார்த்த அவரது தாய், 'உனக்கு இந்த போன் எப்படி வந்தது?' என்று கேட்டுள்ளார்.
அப்போது, சிறுமி முன்னுக்கு முன் பின் முரணாக பதில் அளிக்க, சிறுமியிடம் அவரது தாய் கண்டிப்புடன் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது. நகையைத் திருடிச் சென்று காதலுடன் சேர்ந்து ஐபோன் வாங்கியதைச் சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினர். அதில், சிறுவனும் உண்மையை ஒத்துக் கொண்டார். பின்னர் சிறுவனிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.