/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/child-blur-art.jpg)
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதே சமயம் சென்னை கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த சூழலில் நிவாரணப் பொருட்கள் வாங்க வந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த யுவஸ்ரீ (வயது 14) என்ற சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் சிறுமியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத்தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி மயங்கி உயிரிழந்தது தொடர்பாக, ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் மூச்சுத் திணறியோ, மிதி பட்டோ சிறுமி உயிரிழக்கவில்லை எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)