விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 படித்த மாணவி, வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி இரவு 7 மணியில் இருந்து அந்த மாணவியை காணவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை செஞ்சி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் தனது மகளை வடபாலைகிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சென்னை மறைமலை நகரில் தங்கியிருந்த செந்தில்குமாரையும், அந்த மாணவியையும் போலீசார் மீட்டு வந்தனர். செஞ்சி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டபோது, அந்த மாணவியை செந்தில்குமார் காதல் வலை விரித்து ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக அழைத்து சென்றதாக தெரியவந்துள்ளது.
இதற்கு சிவலபுரை கிராமத்தை சேர்ந்த 22 வயது அண்ணாமலை என்ற இளைஞர் உடந்தையாக இருந்துள்ளார். மூவரும் ஒரே அறையில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் மறுநாள் செந்தில்குமாரின் நண்பர்கள் அண்ணாமலை மற்றும் கீழ் மலையைச் சேர்ந்த மணிமாறன் அதே ஊரைச் சேர்ந்த வாசுதேவன் ஆகியோர் துணையுடன் செந்தில்குமார் அந்த மாணவியை மறைமலைநகரில் உள்ள ஒரு பெருமாள் கோவிலுக்கு அழைத்து சென்று அந்த மைனர் பெண்ணுக்கும், செந்தில் குமாருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன்பிறகு அந்த மாணவர்கள் மணமக்களுக்கு தனி வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளனர். அந்த தனி வீட்டில், அந்த மைனர் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து செஞ்சி போலீசார் மைனர் பெண்ணை திருமணம் செய்த செந்தில்குமார், அவருக்கு உதவிய நண்பர்கள் அண்ணாமலை, மணிமாறன், வாசுதேவன் ஆகிய நான்கு பேர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மைனர் பெண் கடத்தல், அவருக்கு கட்டாய திருமணம் செய்தல், அதற்கு உடந்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின்கீழ், நான்கு பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மைனர் பெண் கடத்தல் சம்பவத்தில் நான்கு இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.