சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும் மசாலா வகைகளில் ஒன்றான பூண்டின் விலையும் தற்போது வானளாவ உயர்ந்திருக்கிறது. வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி சேலம் செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த பூண்டு வியாபாரிகள் சிலரிடம் பேசினோம்.
''தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் பூண்டு மிகவும் சொற்ப அளவிலேயே பயிரிடப்படுகிறது. மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் நடக்கிறது. அந்த மாநிலங்களில் பூண்டும் ஒருவகை முக்கிய பணப்பயிராகும். அந்த மாநிலங்களில் இருந்துதான் இந்தியா முழுமைக்கும் பூண்டு அனுப்பப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
கடந்த மூன்று மாதமாக வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. இதில் பெரிய வெங்காயம், பூண்டு பயிர்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதனால் வட மாநிலங்களில் இருந்து வர வேண்டிய பூண்டு வரத்து குறைந்ததால், விலை வரலாறு காணாத அளவுக்கு எகிறியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒரு கிலோ பூண்டு 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வடமாநிலங்களில் பெய்து வந்த கனமழையால் பூண்டு விளைச்சல் 70 சதவீதம் சரிந்துள்ளது. அதனாலும் வழக்கமான பூண்டு வரத்தும் குறைந்துவிட்டது. கையிருப்பில் உள்ள பூண்டை வைத்து வியாபாரிகள் விற்று வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் ஒரு கிலோ பூண்டு விலை 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை என விற்பனை செய்யப்பட்டது. தற்போது பூண்டு விலை கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி, மார்ச் மாதத்தில் புது மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு வர உள்ளது. அப்போது பூண்டு விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தற்போதைய விலையிலேயே விற்பனையாகும்,'' என்கிறார்கள் வியாபாரிகள்.