திருச்சி மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் காரணமாக தொடர் சோதனைகளும் கைதுகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டவிரோதமாகப் போதை மருந்துகளை வைத்திருப்பதாக, ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐ.பி.எஸ், உத்தரவின் பேரில், தொட்டியம் மற்றும் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பல் கொள்ளிடம் பகுதியில் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து தனிப்படை அதிரடியாக அங்கு சென்று சோதனை நடத்தியது. அதில், மணிகண்டன்(23), சிஜு(33), பாலசுப்பிரமணியன்(38), பிரவீன்குமார் (42), வினோத்குமார் (28), ராமசாமி(42), பார்த்திபராஜ் (31), சுபீர் அஹமத்(37) ஆகியேரையும் கைது செய்தது. பின்பு அவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள், ஊசிகள், மாத்திரைகள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சமூக வலைத்தள செயலி மூலம் பழகி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக போதை மருத்துகளை உபயோகித்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான நபர்களுக்கு போதை மருந்துகளை கொரியர் மூலம் விற்பனை செய்துவந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.