விழுப்புரம் மாவட்டம் அரியூர் பகுதியை சேர்ந்தவர் தனக்கோடி என்பவரின் மகன் வெங்கடேசன். இவர் தமிழ்நாடு வாணிப கழக சேமிப்புக் கிடங்கில் சரக்கு ஏற்றி இறக்கும் பணிக்கு தனக்கு சொந்தமான லாரியை ஒப்பந்த அடிப்படையில் அனுப்பியுள்ளார். அந்த லாரியில் டிரைவராக பணி செய்து வருபவர் சையது சுல் பிக்கர். இவர் நேற்று முன்தினம் முண்டியம்பாக்கம் ரயில்வே நிலையத்திற்கு ரயில் மூலம் வந்த ரேஷன் அரிசி 600 மூட்டைகளை தனது லாரியில் ஏற்றிக்கொண்டு சென்று அதை திண்டிவனம் சந்தை மேட்டுப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் இறக்குவதற்காக கொண்டு வந்து நிறுத்தினார்.
இரவு நேரம் என்பதால் இறக்குவதற்கு ஆட்கள் இல்லை அதனால் மறுங்கால் காலை இறக்கி விடலாம் என்று லாரியை சேமிப்பு கிடங்கு முன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவர் மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தபோது அரிசி மூட்டைகளுடன் லாரி மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் இது குறித்து லாரி முதலாளி வெங்கடேசனுக்கு தகவலளித்தார். அவர் லாரியை கண்டுபிடித்து தருமாறு திண்டிவனம் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட அரிசி லாரியை கண்டுபிடிப்பதற்காக தீவிரமாக தேடி வந்தனர்.
அதன் பொருட்டு போலீசார் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் எனும் கருவி மூலம் லாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன் மூலம் கடத்தப்பட்ட லாரி பெரிய பேரம்பட்டு பகுதியில் நிற்பது கண்டறியப்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது சேற்றில் லாரி சிக்கி நின்றிருந்தது. அதில் இருந்த 600 அரிசி மூட்டைகளில் 520 மூட்டைகள் காணவில்லை. 80 மூட்டைகள் மட்டுமே அதில் இருந்தன. இதன் மூலம் கடத்தப்பட்ட அரிசி லாரி சேற்றில் சிக்கியதும் வேறு ஒரு லாரியை கொண்டு வந்து அரிசி மூட்டையை அதில் மாற்றி ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர். நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அரிசி கடத்திச் செல்லப்பட்ட லாரி கர்நாடக மாநில சூளகிரி பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அரிசி மூட்டையுடன் கடத்தப்பட்ட லாரியை கண்டுபிடித்து கைப்பற்றினர். லாரியை கடத்திச் சென்றதாக விக்கிரவாண்டி அடுத்துள்ள அய்யனாம்பாளையம் இந்திய ராஜ் அவரது கூட்டாளிகள் கந்தன், பொன்னுசாமி, விழுப்புரம், வண்டி மேடு பகுதியைச் சேர்ந்த சையது முஸ்தபா, இவரது சகோதரர் அபுதாஹிர், வேலூர் மாவட்டம் சரளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராம்கி ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஒன்று சேர்ந்து அரிசி மூட்டையுடன் லாரியை கடத்திச் சென்றதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட லாரி, 7 செல்போன், ஒரு கார் வாங்கியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த திண்டிவனம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆங்காங்கே ரேஷன் அரிசி சில்லறை முறையில் முட்டைகளை கடத்தப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது 600 மூட்டைகளுடன் லாரியை கடத்திய மெகா கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.