தமிழக அரசு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை அண்மையில் நடத்தி இருந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில சர்ச்சைகள் எழுந்திருந்தது. குறிப்பாக விசாகவை சேர்ந்த ரவிக்குமார் எம்பி சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழலில் தான் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மாணவர்கள் உறுதிமொழி ஏற்க பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அதாவது திருச்சி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கடந்த மாதம் 22ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் ‘விநாயகர் சதுர்த்தி அன்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனை இணையதளம் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சுற்றறிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் திருச்சி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா தலைமை ஆசிரியர்கள் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் “மிக மிக அவசரம்” எனக் குறிப்பிட்டு, “விநாயகர் சதுர்த்தி அன்று மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டாம்” என்ற அவசர தகவலை வாட்ஸ்அப் வழியாகப் பதிவிட்டுள்ளார். திருச்சியில் உள்ள மாவட்ட லால்குடி, முசிறி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த தகவலை அனுப்பியுள்ளார். விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.