Skip to main content

கஜா புயல் பாதிப்பு கிராமங்களுக்கு சோலார் விளக்கு! அமெரிக்காவில் நடந்த மொய் விருந்தில் 5 ஆயிரம் டாலர் வசூல்!

Published on 09/12/2018 | Edited on 09/12/2018
a

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு சோலார் விளக்குகள் அமைப்பதற்காக அமைரிக்காவில் உள்ள வாகை மகளிர் தமிழ் சங்கம் நடத்திய மொய் விருந்து நிகழ்ச்சியில் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலாகி உள்ளது.

 

நவம்பர் 16 ந் தேதி தமிழகத்தில் கஜா புயல் ஏற்படுத்திய பெரும்பாதிப்பில் இருந்து கிராமங்களையும், விவசாயிகளையும் மீட்கும் பணிகளுக்கு உதவும் நோக்கத்துடன் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் வாகை பெண்கள் மேம்பாட்டுக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க வாழ் தமிழர்களை அழைத்து கலாச்சார விழாவான மொய்விருந்து நடத்தி நிவாரண உதவி பெறலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி டிசம்பர் 8 ந் தேதி நடத்திய மொய்விருந்து நிகழ்ச்சி ஒரு உணவு விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு வகையான சைவம், அசைவ உணவுகளை விருந்தாக அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவரும் விருந்து உண்ட பிறகு மொய் எழுதினார்கள். இதில் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் மொய் வசூலாக கிடைத்துள்ளது. 

 

am

 

இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும், வாகை பெண்கள் மேம்பாட்டுக்குழுவின் உறுப்பினருமான யாமினி கூறும் போது.. பாரம்பரிய உணவு வகைகளிலிருந்து நவீன உணவு வகைகள் வரை தரமிக்க உணவு வகைகளைக் கொண்டு நடைபெற்ற இம்மொய் விருந்து விழாவில் வடக்கு கரோலினா பகுதியில் வசிக்கும் தமிழர்கள் பெரும்பாலானவர்கள் தமது குடும்பத்தினர்களுடன் கலந்துகொண்டனர். இதற்காக வாகைக்குழுவினர் பெரும் ஒத்துழைப்பை வழங்கினார்கள். அவர்களுக்கும் தாராளமாக மொய் வழங்கிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

 

இந்நிகழ்வைப் பற்றிக் குறிப்பிட்ட போரூர் இராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிவரும், தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான முனைவர்.பூங்குழலி கூறும் போது..  பாதிக்கப்பட்ட  தமிழர்களுக்கான நிகழ்வாக இது இங்கு நிகழ்த்தப்பட்டாலும், தமிழர்கள் மட்டுமல்லாமல், இங்கு வாழும் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என இந்தியர்களாக ஒன்று கூடி சங்கமித்தது மனிதநேயத்தை காட்டியது.

 

வாகைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பொறியாளர் லாவண்யா..  அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றும் தமிழரான மகேந்திரன் 5 மணிநேரம் பயணம் செய்து மொய்விருந்து நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்து சென்றதும், தமிழர்கள், இந்தியர்கள் என்பதோடு சில வெளிநாட்டினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தது மனிதர்கள் எல்லாவற்றையும் தாண்டி நாம் மனிதர்கள் என்னும் மாண்பை உணர்த்துவதாக இருந்ததாக குறிப்பிட்டார்.

 

a

 

இம்மொய்விருந்து விழாவில் கலந்துகொண்ட 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்  அளித்த மொய் மூலம் கிடைத்த  5 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மூலம் முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான எல்.என்.புரம், மாங்காடு, வடகாடு, கொத்தமங்கலம்,  செரியலூர், உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் தெருவிளக்குகளை அமைக்க இருப்பதாக இந்நிகழ்வை தமிழ்நாட்டில் இருந்தபடியே, வாகை குழுவினரோடு சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியரும் , கல்வியாளர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பாளருமான சதிஷ்குமார் கூறினார். மேலும் அமெரிக்காவில் நடைபெறும் மொய்விருந்து சேவை நோக்கம் கொண்டது. கலந்து கொண்டவர்களும் இம்மொய் விருந்து நிகழ்வில் பங்கேற்று தம்மால் இயன்ற , விரும்பிய அளவில் நன்கொடையாக நிதி அளிக்கும்  நிகழ்வாக  இது அமைந்துள்ளது. இதனால்  பலன் நமக்கு கிடைக்கும் என எவரும் எதிர்பார்த்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு நன்கொடை அளிக்கவில்லை. அமெரிக்காவில் இருந்தாலும் தமது சொந்த மண்ணை நேசிக்கும் அமெரிக்க தமிழினச் சொந்தங்கள் நன்றிக்கு மட்டுமல்ல, போற்றுதலுக்கும் உரியவர்கள் என்றார். நிகழ்ச்சிய ஏற்பாடுகளை ஜெனிபர், அனிதா, அருள்ஜோதி, திவ்யா, பிரேமலதா, நாகராணி, சத்யா,கலைச்செல்வி, கிருஷ்ணவேணி, தேவகி மற்றும் வாகை குழுவினர் செய்திருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

 
`); });