![t](http://image.nakkheeran.in/cdn/farfuture/tSjlTitACVUPQ3E1bfknPRFoN4KbsWu7BBpX9oa9vso/1544297532/sites/default/files/inline-images/thennai%20madal.jpg)
கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அகற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் சிலர் தென்னை மரங்களை வெட்டி செங்கல் சூலைக்கும் அதன் நுணிப்பகுதியான மடல் பகுதியை மதுரைக்கும் எடுத்துச் செல்கின்றனர்.
நவம்பர் 16 ந் தேதி அதிகாலை கஜா புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், செரியலூர், வேம்பங்குடி, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, புள்ளாண்விடுதி, நெடுவாசல், பனங்குளம், குளமங்கலம் நெய்வத்தளி மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் தென்னை மற்றும் மா, பலா, வாழை, தேக்கு என்று அத்தனை மரங்களும் ஒடிந்து சாய்ந்தது. பல வருடங்களுக்கு பலன் கொடுக்கும் பலாவும், தென்னையும் ஒடிந்து சாய்ந்தது விவசாயிகளை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. அதனால் தங்கள் தோட்டங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்ற கூட மனமின்றி தவித்து வருகின்றனர்.
![t](http://image.nakkheeran.in/cdn/farfuture/_mI1gmOLYdHPtZDFetv4W_ltcKqRK9FtTzxEVWZ3URw/1544297560/sites/default/files/inline-images/thennai%20matal.jpg)
இந்த நிலையில் மதுரை மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்து கீரமங்கலம், வேம்பங்குடி பகுதிக்கு வந்துள்ள சிலர் தென்னை மரங்களை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். அதே போல வடகாடு, மாங்காடு, கீரமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் தர்மபுரி பகுதியில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் செங்கல் சூளைக்கு தென்னை மரங்களை அறுத்து எடுத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் அறுத்து ஏற்றப்படும் தென்னை மரங்களின் நுனிப் பகுதியும் அடிப்பகுதியில் அந்தந்த தோட்டங்களிலேயே கிடப்பதால் அவற்றையும் அகற்ற அதிக செலவாகும் என்ற நிலையில் ஒரு சில இடங்களில் நுனிப்பகுதியில் உள்ள மடல்கள் விற்பனைக்காக மதுரையிலிருந்து வந்துள்ள தொழிலாளிகள் வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இவை எதற்கும் விவசாயிகளுக்கு எந்த தொகையும் கிடைப்பதில்லை. தோட்டம் சுத்தமானால் சரி என்று விவசாயிகள் மரங்களையும், மடல்களையும் இலவசமாக கொடுத்து வருகிறார்கள். மடல்கள் மதுரை நகரில் சிறு சிறு துண்டுகளாக விற்பனைக்கு வைக்கப்படுவதாக தொழிலாளிகள் கூறுகின்றனர். அனைத்து தோட்டங்களிலும் இது போல மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல யாரும் முன்வரவில்லை என்பதால் மரங்கள் சாய்ந்த நிலையிலேயே கிடக்கிறது.