Skip to main content

தானாகவே எல்லாம் சரியாகிவிடும் என்று அரசு நினைக்கிறதா?

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
gaja


 

 

மிகக் கொடூரமான கஜா புயல் தாக்குதலில் ஆறு மாவட்டங்கள் நாசமாகி உள்ளன. ஆனால், இதுவரை மின்சார வசதியையும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கான வசதியையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை. 
 

ஐந்து நாட்கள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையிலும் முதல்வர் எடப்பாடியோ ஹெலிகாப்டரில் பயணம் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். இந்த பயணத்தின் மூலம் அவர் எதைச் சாதிக்க நினைக்கிறார்? எதைத்தான் சாதிக்க முடியும். அலறித் தவிக்கும் மக்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவிக்க மனமில்லாமல், வானில் பறந்து அவர்களுடைய வேதனையை வேடிக்கை பார்க்க விரும்புகிறாரா எடப்பாடி என்று அரசியல் விமர்சகர்கள் கோபமான கேள்விகளை முன்வைக்கிறார்கள்.


இதோ ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்த்த முதல்வர் எடப்பாடி, புதுக்கோட்டை நகருக்கு மட்டும் ஒரிரு நாளில் மின்சாரம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார். மீட்புக் குழுவினருக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார். முதல்வருக்கு முன்னரே எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு இடங்களுக்கு நேரிலேயே சென்று மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். திமுகவினரால் இயன்ற நிவாரண உதவிகளையும் வழங்கியிருக்கிறார். ஸ்டாலின் முதல் ஆளாக நிற்க முடிகிறது என்றால், முதல்வரால் ஏன் நிற்கமுடியவில்லை என்ற கேள்வியை கேட்காத ஊடகங்கள், ஸ்டாலின் போனதால் என்ன நடந்துவிட்டது என்று விவாதம் நடத்துகின்றன. ஆனால், இப்போது முதல்வர் போயும்கூட ஒன்றும் நடக்கவில்லை என்பதே நிதர்சனம் என்பது தெரிந்துவிட்டது.
 

ஒரே உண்மையை இந்த இடத்தில் சொல்லவேண்டியிருக்கிறது. அதாவது முதல்வர் நேரடியாக சாலைவழியாக ஆறுதல் தெரிவிக்க புறப்பட்டிருந்தால், சாலைப் போக்குவரத்து போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டிருக்கும் என்பதை ஊடகங்கள் மறைக்கின்றன.


 

gaja

 

ஆனால், நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெறுவதாக அரசு வெறும் வாயில் முழம்போடுகிறது. நேற்றுவரை குடும்பத்தோடு நிம்மதியாக வாழ்ந்தவர்கள் இன்று நடுத்தெருவில் அடுத்த வேளை உணவுக்காக அலைபாயும் நிலையில், ஆத்திரம் வருவது இயல்புதான். அப்படி ஆத்திரப்பட்டு போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது போலீஸை ஏவி கொடூரமாக தாக்குதல் நடத்துவது எங்கே கொண்டுபோய் முடியுமோ தெரியவில்லை.
 

புயல் நிவாரணத்தில்கூட அரசியலைப் புகுத்துவது அரசுக்கு அழகல்ல என்றே நடுநிலையாளர்கள் கூறுகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்