Skip to main content

நீட், நிதி, மாநில உரிமை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

The full speech of the Prime Minister of the Triennial!

 

திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பைபாஸ் சாலை அருகில் நடைபெற்றது.

 

இதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பகுத்தறிவு தந்தை பெரியார், காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளையும், திமிழனத்தின் விடிவெள்ளியாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க நாளையும் இணைத்து முப்பெரும் விழா கொண்டாட வேண்டும் என 1985ம் ஆண்டு தலைவர் கலைஞர் அறிவித்தார். அன்றிலிருந்து இன்று வரை நாம் இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்திவருகிறோம். இந்த ஆண்டுக்கு கூடுதலாக இரண்டு சிறப்புகள் உள்ளன. இந்த ஆண்டு நம்மையெல்லாம் ஆளாக்கிய கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். நமது மாபெரும் இயக்கத்தின் பவள விழா இன்றிலிருந்து துவங்குகிறது. கொட்டும் மழையில் பிறந்ததால் என்னவோ உடனே வளர்ந்தது தி.மு.கழகம். ஆல மரமாக வளர்ந்துள்ள இந்த கழகத்தின் பவளவிழாவை ஓராண்டுக்கு நாம் கொண்டாடப்போகிறோம். அந்தவகையில், இன்று நாம் ஐம்பெரும் விழாவை நடத்திக்கொண்டிருக்கிறோம். தொண்டர்களை தம்பிகள் என அழைத்தவர் அண்ணா, உடன் பிறப்புகள் என அழைத்தவர் கலைஞர், நான் உங்களில் ஒருவன். தொண்டர்களால் கட்சித் தலைவனாகவும், முதலமைச்சராகவும் ஆக்கப்பட்டவன் நான். 

 

மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கக் கூடிய போர்க்களத்தின் பயணத்தின் இடையே இந்த முப்பெரும் விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 1949ம் ஆண்டு திமுக உதயமானது. 75 ஆண்டுகளாக தமிழ் சமுதாயத்தின் காவல் அரணாக நமது இயக்கம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 1967ம் ஆண்டு நாம் முதல்முறையாக ஆட்சிக்கு வருகிறோம். அதன்பிறகு 71, 89, 96, 2006, 2021 என மொத்தம் ஆறு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறோம். ஒரு பக்கம் ஆட்சி, மறுபக்கம் கட்சி இந்த இரண்டின் மூலமாக தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களைவிட தலை சிறந்த மாநிலமாக மாற்றிக்கொண்டுவருகிறோம். இடையிடையே கொள்கை அற்ற அதிமுக கூட்டம், ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை சீர் அழித்தாலும், அதனையும் திருத்தி தமிழ்நாட்டை வளர்த்துவருகிறோம். இன்று தமிழ்நாட்டின், தமிழ்நாட்டு மக்களின், தமிழினத்தின் வளர்ச்சி பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சியாக இருக்கிறது. 

 

தமிழ்நாட்டு மாநிலத்தின் உரிமைகளை சிதைப்பதன் மூலமாக, நமது மாநில மக்களின் வாழ்வை அழிக்க பார்க்கிறார்கள். அதனைத் தான் பா.ஜ.க. செய்துகொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. மூலமாக மாநில உரிமையை பறித்தது. ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமானது நிதி ஆதாரம்; வரி வருவாய். இதன் மூலம், மாநில அரசை செயல்படவிடாமல் முடக்குகிறது. மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டது மாநில அரசு. மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், குடிநீர், சாலைவசதிகள், கடன்கள், மானியங்கள், பெண்கள் முன்னேற்றம், விளிம்பு நிலை மக்களுக்கான உதவிகள், இவை எல்லாவற்றையும் வழங்கவேண்டிய கடமை மாநில அரசுக்கே உள்ளது. இதனை செய்துகொடுப்பதற்கு நிதி வேண்டும். அப்படிபட்ட நிதி ஆதாரங்களை கிடைக்கவிடாமல் செய்வதற்கு ஜி.எஸ்.டி. கொண்டுவந்து, நிதி வருவாய் வாசலை அடைத்தார்கள். வசூல் செய்யும் நிதியை முறையாக பிரித்தும் கொடுப்பதில்லை. 

 

கல்வி மிகமிக முக்கியமானது. ஒவ்வொரு மாநில அரசும், அங்கு வாழும் பெரும்பான்மையான மக்களின் பண்பாடு, அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியை வழங்கும். புதியக் கல்வி கொள்கை என சொல்லி நம் மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். ஒன்றிய அரசு சொல்லும் கல்வி வளர்ச்சியை தமிழ்நாடு எப்போதோ எட்டிவிட்டது. கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்கும் முயற்சிதான் அவர்கள் கொண்டுவரக்கூடிய கல்விக் கொள்கை. 

 

மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டது நீட் தேர்வு. லட்சக் கணக்கில் செலவு செய்தால் தான் தேர்ச்சி பெற முடியும் எனும் நிலையை உருவாக்கிவிட்டார்கள். சில தனியார் பயிற்சி மையங்களின் லாபத்திற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அனிதா முதல் ஜெகதீசன் வரை ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள். இது தற்போது வடமாநிலங்களிலும் நடக்கத்துவங்கிவிட்டது. கடந்த 14ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி, நீட் தேர்வுக்காக படிக்கவந்து ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்டார். இதுமட்டுமல்ல, கடந்த ஒரு ஆண்டில் 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இத்தனை தற்கொலைகளுக்கான காரணத்தை பா.ஜ.க. ஆராய்ந்ததா? இரக்கம் அற்ற அரசாக மோடி அரசு இருக்கிறது. 

 

நேற்று ஒரு மீம்ஸ் பார்த்தேன். அதில் பெண்கள், ‘எங்கள் முதல்வர் சொன்ன ரூ. 1000 வந்துவிட்டது. பிரதமர் சொன்ன ரூ. 15 லட்சம் என்ன ஆனது’ என இருந்தது. தற்போது வைரலாகிவருகிறது. தமிழ்நாட்டிற்கு எத்தனை வாக்குறுதிகளைக் கொடுத்தார் பிரதமர். ஆனால், எதனையும் நிறைவேற்றவில்லை. உதாரணத்திற்கு 2015ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் அமைப்போம் என்றார். ஆனால், தற்போது தான் டெண்டரே விட்டுள்ளனர். இதனையெல்லாம் யாரும் நினைவு செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் மற்றப் பிரச்சனைகளை கிளப்பி குளிர்காயப் பார்க்கிறார்கள். 

 

கடந்த 9 வருடத்தில் என்ன சாதனை செய்திருக்கிறார்கள் என்றால், 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டரின் விலை ரூ.420. இதனை மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 1200க்கு உயர்த்தியதுதான் மோடியின் சாதனை. தற்போது தேர்தல் வரும் காரணத்திற்காக கண்துடைப்பாக வெறும் ரூ. 200-ஐ குறைத்துள்ளனர். 2014ம் ஆண்டு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 71. தற்போது ஒரு லிட்டர் ரூ. 102. ஒன்றிய அரசின் வரியை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளனர். டீசல் ரூ. 55. தற்போது 94 ரூபாய். இதில் ஒன்றிய அரசின் வரி ஏழு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் பா.ஜ.க. அரசு ரூ. 100 லட்சம் கோடியை கடன் வாங்கியுள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்தியாவின் கடன் ரூ. 55 லட்சம் கோடி. இந்த 9 ஆண்டுகளில் அது ரூ. 155 லட்சம் கோடியாக மாறியுள்ளது. 

 

பெரிய நிறுவனங்களுக்கு ரூ. 14 லட்சம் கோடியை வாரக்கடன் என சொல்லி தள்ளுபடி செய்துள்ளனர். பணவீக்கம் அதிகரித்துள்ளது. இப்படி வேதனை மட்டுமே மக்களுக்கு தந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும். சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி. அறிக்கையின்படி பார்த்தால் ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் சிக்கியிருப்பது சி.பி.ஐ. அதிகாரிகள் என மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. இத்தகைய ஊழல் முகத்தை மறைக்கப் பார்க்கிறார்கள். நம் முன் இருக்கும் முக்கிய கடமை இந்த ஊழல் முகத்தை கிழிக்க வேண்டியது. 

 

தமிழ்நாட்டை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் நம் கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுக்க வெற்றி பெற வேண்டும் நமது ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால், 15 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி எழுப்ப முடியுமா முடியாதா? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா முடியாதா? தமிழ்நாட்டுக்கு தேவையான ஏராளமான இரயில் திட்டங்களை நம்மால் கொண்டுவர முடியுமா முடியாதா? புதிய விமான நிலையங்களையும் மெட்ரோ இரயில்களையும் இயக்க முடியுமா முடியாதா? நம் இந்தியா கூட்டணி ஆட்சி அமையுமானால், இவையெல்லாம் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரமுடியும். 

 

இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித்தர நம்மால் முடியும். இங்கு நாம் அமல்படுத்திக்கொண்டிருக்கிற திராவிட மாடல் திட்டங்களை இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் கொண்டு சேர்க்கமுடியும். இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்த்தல் வரப்போகிறது” என்றார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு;  திமுக தொண்டர்களுக்கு முதல்வர் முக்கிய உத்தரவு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Mikjam storm damage; Chief Minister's important order to DMK workers

 

வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாகத் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே தீவிரப் புயலாக இன்று (05.12.2023) மாலை 4 மணியளவில் மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது. 

 

அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாகத் தொடர்ந்து பெய்து வந்த வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. அது மட்டுமின்றி இந்த மாவட்டங்களில் இந்த புயல் மழையின் தாக்கம் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியான தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி சீரமைப்புப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக் கூடத்திற்கு நேரில் சென்று அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கி, அவர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, “மழைநீரை அகற்றிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இயல்புநிலை திரும்பும். தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தரும்” என்றும் தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து, கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அம்முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார். பின்னர், யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசி, அவர்களுக்கு உணவு, போர்வை, பாய் ஆகியவற்றை வழங்கினார். பின்னர், சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலிருந்து களப்பணி ஆற்றுவதற்காக வருகை தந்தவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இக்கட்டான இச்சூழ்நிலையில் பணிகளை மேற்கொள்ள வருகை தந்துள்ளவர்களுக்கு பாராட்டு தெரிவித்து, பணிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

 

அதன் பின்னர் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.

 

Mikjam storm damage; Chief Minister's important order to DMK workers

 

இந்நிலையில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும்  மிக்ஜாம் புயல் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் திமுகவினருடன், இன்னும் பல தொண்டர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த திமுக தொண்டர்கள் விரைந்து வாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 


 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'மிக்ஜாம்' புயல்; அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

'Miqjam' Storm; Principal inspection at State Emergency Operations Center

 

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு இன்று (03.12.2023) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர்களைக் காணொளி வாயிலாகத் தொடர்பு கொண்டு கனமழை மற்றும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

 

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அரசு உயர் அலுவலர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளேன். அந்த அடிப்படையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4967 இதர நிவாரண மையங்களில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பகுதிகளில் உள்ள மக்களை முன்கூட்டியே அழைத்து வந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்காக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் 225 வீரர்களைக் கொண்ட ஒன்பது குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. புயலின் போது மரங்கள், மின் கம்பங்கள், மின் கம்பிகள் கீழே விழும் அபாயம் உள்ளதால் மக்கள் வெளியே வராமல் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க அறிவுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

 

இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே. பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.அ. ராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  எனப் பலரும் உடனிருந்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்