Skip to main content

முழு ஊரடங்கு: ஆற்றில் நீந்திய மது அருந்துவோர்

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

Full Curfew: cuddalore drinkers

 

தமிழகத்தில் மது அருந்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவருகிறது. அதேபோல், பண்டிகை காலங்களில் மதுவிற்பனை இன்னும் கூடுதலாக இருந்துவருகிறது. கரோனா, பரவல் தடுப்பு நடவடிக்கையாகக் கட்டுப்பாடுகள், ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் கடந்த 13ம் தேதி போகிப் பண்டிகை அன்று சென்னை மண்டலத்தில் மது விற்பனை ரூ.39 கோடி 13 லட்சம், திருச்சி மண்டலத்தில் ரூ.41 கோடி 58 லட்சம், சேலம் மண்டலத்தில் ரூ.40 கோடி 67 லட்சம், மதுரை மண்டலத்தில் ரூ.42 கோடி 70 லட்சம், கோவை மண்டலத்தில் ரூ.38 கோடி 96 லட்சம் எனத் தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.203 கோடியே 5 லட்சம் அளவிற்கு மது விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ. 55 கோடியே 3 லட்சம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அதேபோல் 14ஆம் தேதி பொங்கல் அன்று தமிழக அளவில் மொத்த மது விற்பனை ரூ.317 கோடியே 18 லட்சம். இதுவும் கடந்த ஆண்டைவிட ரூ. 47 கோடியே 65 லட்சம் அதிகம். அதேபோல், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மொத்த மது விற்பனை 675 கோடியே 19 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 102 கோடியே 95 லட்சம் ரூபாய் அதிகமாக மது விற்பனையாகி உள்ளது.

 

அதேசமயம், காணும் பொங்கலான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மது அருந்துவதற்காக புதுச்சேரிக்கு படையெடுத்தனர் தமிழ்நாடு எல்லையில் இருந்த மது அருந்துவோர்கள். சாலை வழியாகச் சென்றால் காவல்துறை போக்குவரத்தைத் தடை செய்யும் என்பதால், புதுச்சேரி கடலூர் மாநில எல்லையில் ஓடும் பெண்ணை ஆற்று தண்ணீரில் நீந்திச் சென்று மது அருந்தியுள்ளனர். காவல்துறையினர் அங்கும் கண்காணிப்பு பணியில் இருந்தனர். ஆனாலும், அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுச் சென்று வந்தனர். 

 

அதேசமயம், புதுச்சேரி தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஆல்பேட்டை சோதனைச் சாவடி அருகே 30க்கும் மேற்பட்டவர்கள் புதுச்சேரி பகுதியில் இருந்து சைக்கிளில் கும்பலாக வந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் புதுச்சேரிக்குச் சென்று மது அருந்திவிட்டு வருவது தெரியவந்தது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முழு ஊரடங்கில் வாடகை கார், ஆட்டோக்களுக்கு அனுமதி!

Published on 23/01/2022 | Edited on 23/01/2022

 

coronavirus prevention sunday lockdown tn govt

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று (23/01/2022) தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் இன்றும் அனுமதிக்கப்படும். முழு ஊரடங்கின் போது ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு தடை தொடரும் என அரசு அறிவித்துள்ளது.

 

முழு ஊரடங்கு நாளில் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் வாடகை கார்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு போன்ற இடங்களில் இருந்து வாடகை கார்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரயில் நிலையங்கள் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும்.

 

முழு ஊரடங்கான இன்று ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எனினும், நாளை (24/01/2022) வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தமிழ்நாடு முழுவதும் இன்று (23/01/2022) டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Next Story

ஞாயிறு ஊரடங்கு: திருச்சியில் ரூ.21 லட்சம் அபராத வசூல்

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

Sunday curfew: Rs 21 lakh fine collected in Trichy!

 

கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவலைக் கட்டுபடுத்த பல்வேறு கட்டுபாடுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு. அவற்றை முறையாகவும், முழுமையாகவும் அமல்படுத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். 

 

அதன்படி, திருச்சி மாநகர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட 8 சோதனைச் சாவடிகள், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது. திருச்சி மாநகரின் முக்கிய சந்திப்புகளான மத்திய பேருந்து நிலையம், தலைமை தபால் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம் சந்திப்பு ஆகிய முக்கிய சாலை சந்திப்புகளில் காவல் ஆய்வாளர் தலைமையிலும் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலும் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது. 

 

இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரை நிறுத்தி விசாரணை செய்து, முகக்கவசம் அணிந்து வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் காரணமின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டது. மேலும் மாநகரில் கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடைகள் அருகில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், விதிகளை மீறும் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராத தொகையும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த 6ஆம் தேதி அன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து முகக்கவசம் அணியாமல் வந்த 9734 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.19,46,800/- அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியின்றி செயல்பட்டவர்கள் மற்றும் ஊரடங்கின்போது கடைகளைத் திறந்து வைத்திருந்த நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் ரூ.21 இலட்சம் அபராதத் தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது.