/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2309.jpg)
நோயாளி ஒருவருக்குத் தனியார் உணவகத்திலிருந்து வாங்கிச்சென்ற இட்லியில் தவளை இறந்து கிடந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அருகில் ஒரு தனியார் சைவ உணவகம் செயல்பட்டுவருகிறது. அரசு மருத்துவமனைக்கு எதிரே அமைந்திருப்பதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் இந்த ஹோட்டலில் உணவு வாங்கிச் சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில், 27ஆம் தேதி காலை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாடாகுடியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் உறவினர் ஒருவர் அந்த ஹோட்டலில் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு, நோயாளி முருகேசனுக்கும் 4 இட்டிலிகளைச் சுடச்சுட பார்சல் வாங்கிக்கொண்டு சென்றார்.
பசியோடு பார்சலை வாங்கிப் பிரித்த முருகேசனுக்கு பேரதிர்ச்சி. அவரது உறவினர் வாங்கிவந்த சூடான இட்லிக்குள் தவளை வெந்து இறந்துகிடந்ததைப் பலரிடமும் காட்டி அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அந்தப் பார்சலை முருகேசனின் உறவினர்கள் மற்றும் அந்த வார்டில் சிகிச்சை பெற்றுவரும் சக நோயாளிகளின் உறவினர்களும் ஒன்றாகச் சென்று ஹோட்டல் உரிமையாளரிடம் முறையிட்டனர்.
அந்த சமயத்தில் ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களும் "என்னது இட்லிக்குள்ள தவளை இறந்து கிடந்ததா" என பதறியடித்துக்கொண்டு சாப்பாட்டு இலையைப் பாதியிலேயே மூடிவிட்டு வாயில் கைவிரலைவிட்டு வாந்தி எடுத்தனர். அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஹோட்டல் உரிமையாளரிடம் முறையிட்டனர்.
அந்த ஹோட்டல் உரிமையாளரோ, “இதுல என் தவறு ஒன்றுமில்லை. தொடர்ந்து விடாம மழை பெய்யுது. தவளைங்க எப்படி மாவுக்குள்ள விழுந்ததுன்னு தெரியல. அவங்க வாங்கிச் சென்ற இட்டிலிக்கு உண்டான பணத்தை மட்டும் கொடுத்துடுறேன்” என கூறியிருக்கிறார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூச்சலிட, வேறு வழியின்றி இட்லி ஊற்ற வைத்திருந்த மீதி மாவை பொது மக்கள் கண்முன்னே கீழே கொட்டிவிட்டு, “தயவுசெய்து இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம்” என கெஞ்சிக்கேட்டுக்கொண்டே ஹோட்டலை அவசர அவசரமாகப் பூட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், "சுகாதாரமற்ற முறையில் அலட்சியப் போக்குடன் பல உணவகங்கள் கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் செயல்படுகின்றன. அவர்களைக் கண்கானிக்க வேண்டிய சுகாதாரத்துறை, உணவுத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதன் விளைவு இப்படி நடக்கிறது. இந்தக் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதோடு இருந்துவிடாமல், கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் மற்றகடைகளில் மாற்றம் வரும். கும்பகோணம் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கும்பகோணத்தில் உள்ள உணவகங்களில் சுகாதாரமான உணவுகள் சமைக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வுசெய்ய வேண்டும். குறிப்பாக, நோயாளிகள் அதிகம் பயன்படுத்தக்கூடிய அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஹோட்டல்களில் இதுபோல நடப்பதற்கு காரணம் அதிகாரிகள் ஹோட்டல்களை அடிக்கடி ஆய்வு செய்யாததுதான். இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)