மதுரையில் சிற்றுண்டி கடையில் விற்கப்பட்ட ஐஸ்கிரீமில் இறந்த நிலையில் தவளை கிடந்த நிலையில், அதனை தெரியாமல் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை திருப்பரங்குன்றம் கோவளம் நகர் மறைமலை தெருவைச் சேர்ந்தவர்கள் அன்புச்செல்வன், தமிழரசன். சகோதரர்களான இருவரும் குடும்பத்துடன் தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்துவிட்டு நண்பகல் நேரம் கோவிலுக்கு எதிரே உள்ள சிற்றுண்டி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால், குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீம் ஒன்றில் தவளை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது.
இதனைக் கண்டு குழந்தை நித்ராஸ்ரீ தந்தை செல்வத்திடம் கூற, உடனடியாக குழந்தைகள் மூவரும் அருகிலிருந்த திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மூன்று குழந்தைகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்த நிலையில், கோவில் எதிரே உள்ள கடையில் தவளை இறந்து கிடந்த ஐஸ்கிரீம் விற்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.