Skip to main content

போதை படுத்தும் பாடு; நண்பனையே கொலை செய்த இளைஞர்கள்

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

friends people who incident her friend while intoxicated

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது சிவக்கொழுந்து. இவர் கடந்த 29ஆம் தேதி இரவு கடாம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் கிடந்துள்ளார். அவரது நிலையைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அவரது வீட்டுக்கு கொண்டு சென்று விட்டுள்ளனர். அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்ததை கண்ட அவரது குடும்பத்தினர் அவரைப் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் சிவக்கொழுந்து.

 

விபத்தில் சிக்கிக் கிடந்தது குறித்து சிவக்கொழுந்து மனைவி எழிலரசி தனது கணவர் காடாம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார் அந்த நேரத்தில் அவர் எப்படி விபத்தில் சிக்கினார் அவரது உடலில் உள்ள காயங்கள் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது என்று காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவக்கொழுந்து சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லாஹ், இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் சிவக்கொழுந்து சாலை விபத்தில் காயமடையவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளதாக கண்டுபிடித்தனர். 

 

மேலும், சிவக்கொழுந்து அவரது நண்பகள் காட்டாண்டி குப்பத்தைச் சேர்ந்த கார்மேகம், பொக்லின் ஆபரேட்டர் அபினேஷ் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 29ஆம் தேதி இரவு டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு ஒரு இடத்தில் சென்று அமர்ந்து மது அருந்தி உள்ளனர் அப்போது மது சாப்பிடுவதற்கு சைடிஸ்ஸாக கறி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதை சாப்பிடும் போது மூவருக்கிமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கார்மேகம் அபினேஷ் இருவரும் சிவக்கொழுந்தை கடுமையாக தாக்கியுள்ளனர்.  இதில் சிவக்கொழுந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அவர்கள் இருவரும் சிவக்கொழுந்துவை கொண்டு வந்து விபத்தில் காயம் அடைந்ததாக காட்டுவதற்காக சாலையில் போட்டு விட்டு சென்றது தெரியவந்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை  கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. கொலையில் சம்பந்தப்பட்ட கார்த்திகேயன், அபினேஷ், கார்மேகம், ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் கார்மேகம் அபினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மது போதை நண்பனை கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது பலரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்