Skip to main content

புதுமணத் தம்பதியருக்கு வெங்காயத்தைப் பரிசாக அளித்த நண்பர்கள்!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

Friends gifted onions married couples

 
வட மாநிலங்களில் தற்போது பொழிந்து வரும் கனமழை காரணமாக வெங்காய உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், வெங்காய இறக்குமதியும் இல்லாததால் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


தற்போது சின்ன வெங்காயம் 150 ரூபாய் வரையிலும் பெரிய வெங்காயம் 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் புதுமணத் தம்பதியருக்கு வெங்காயத்தைப் பரிசாக அளித்துள்ளனர் அவரது நண்பர்கள்.
 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கம்மாபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமாருக்கும், சீர்காழியைச் சேர்ந்த தீபா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்குப் பல்வேறு பரிசுப் பொருட்களை, அன்பளிப்புகளை வழங்கி வாழ்த்தினர்.


இந்த நிலையில், மணமகனின் நண்பர்கள் வெங்காயத்தைப் பரிசுப் பொருளாக பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்து மணமக்களுக்கு வழங்கினர். வெங்காயப் பரிசுப்பெட்டி வழங்கிய நண்பர்கள் அதை அப்போதே பிரித்துப் பார்க்க வேண்டும் என்று மணமக்களிடம் வலியுறுத்தினர். பரிசுப் பெட்டியைப் பிரித்துப் பார்த்ததில் அதில் இரண்டு கிலோ வெங்காயம் இருந்தது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் இதை மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் பார்த்து ரசித்தனர்.  
 

cnc

 

இதுகுறித்து மணமகனின் நண்பர்கள் கூறும்போது, “திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் சமையலுக்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை தற்போது 100 ரூபாய் முதல்  150 ரூபாய் வரை விலை உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் வெங்காய விலை உயர்வை மணமக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவும், வெங்காயத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும் விலை உயர்ந்த வெங்காயத்தைப் பரிசாக வழங்கியுள்ளோம்” என்றனர். மணமக்களுக்கு வெங்காயப் பரிசுப்பெட்டி வழங்கிய நிகழ்வு சிலருக்கு நகைச்சுவையாகவும், சிலருக்கு வெங்காய விலை உயர்வைப் பிரதிபலிப்பதாகவும் இருந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்