மேம்பாலத்தில் சுயநினைவின்றிக் கிடந்த தனது நண்பரைத் தள்ளுவண்டியில் வைத்து, மருத்துவமனை நோக்கித் தள்ளிக்கொண்டு வாலிபர் ஒருவர் ஓடிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம்புலன்ஸ் கிடைக்காததால் இப்படி தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு செல்வதாக அந்த வாலிபர் பேசும் அந்த வீடியோ காட்சி காண்போரின் இதயத்தைக் கலங்கடிக்க வைக்கிறது.
விருதுநகர் மாவட்டம் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். கொத்தனாராகப் பணியாற்றி வந்த இவருடன், தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். தற்பொழுது வேலை எதுவும் கிடைக்காததால் ஆறுமுகம் ஆதரவின்றி தெருக்களில் சுற்றித் திரிந்துள்ளார். பல நாட்களுக்குப் பிறகு தன்னுடன் வேலை செய்த ஆறுமுகம் உடல் நலிவுற்று மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ந்த சுரேஷ், உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டார்.
ஆனால் சுரேஷிடம் செல்போன் இல்லாததால், 108க்கு எப்படி அழைப்பது என்று அவருக்குத் தெரியவில்லை. அருகில் இருந்தவர்களும் உதவி செய்யாததால் தன்னிடமிருந்த தள்ளுவண்டியில் அவரை வைத்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் தள்ளிச் சென்றுள்ளார். பாலம் ஒன்றின் வழியாகச் செல்லும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் 'ஏன் இப்படி தள்ளிக்கிட்டு போறீங்க' எனக் கேட்க, ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் செல்வதாக வண்டியைத் தள்ளிக்கொண்டே அவர் பரபரப்பாகப் பேசும் அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த இருசக்கர வாகன ஓட்டி, தன் வாகனத்தை வைத்து தள்ளுவண்டியை உந்த வைத்து அவருக்கு உதவி புரிந்தார். ஒருவழியாக தன்னுடைய நண்பரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தார் சுரேஷ்.