முரசொலி, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து, தினமலர் ஆகிய நாளிதழ்கள் மற்றும் நக்கீரன் வாரமிருமுறை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக அமைச்சர்கள் குறித்தும், அரசின் முறைகேடுகள் குறித்தும் செய்தி வெளியிட்டதாக கடந்த 2012-ம் ஆண்டு செய்தி வெளியிட்ட நாளிதழ்கள் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யபட்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதில், முரசொலி நாளிதழ் மீது 20 வழக்குகளும், டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து, நக்கீரன் மற்றும் தினமலர் மீது 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு 2012-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
முரசொலி நாளிதழ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குமேரசன்,” தலைவர்களின் கருத்துகளைப் பதிவு செய்யும் விதமாக பத்திரிகையில் செய்தி வெளியிடுகின்றனர். ஆனால், அந்த கருத்துகளின் அடிப்படையில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுகின்றன. கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனைச் சட்டத்தை இந்த அரசும் கடைப்பிடித்து வருகிறது. மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாக செய்திகள் பிரசுரிக்கப்பட்டால் அவதூறு வழக்குகள் தொடரப்படுகிறது.” என்றார்.
நக்கீரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள்,“தனி நபர் மீது விமர்சனம் செய்து கருத்துகள் வெளியிட்டாலும், அரசின் செலவில்தான் இந்த அவதூறு வழக்குகள் பதிவாகிறது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.”என்றார். இந்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அதிகளவில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுவதாகக் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.