சேலத்தில், இந்து சமய அறநிலையத்துறை கோயிலுக்கு பூஜை பொருள்கள் வாங்கியதில் 12 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக பெண் செயல் அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சேலம் உடையாபட்டியில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில், கடந்த 2008 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சசிகலா என்பவர் செயல் அலுவலராக பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில், பூஜை பொருள்கள் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறைக்கு புகார்கள் சென்றன. இந்த புகாரின் பேரில், கோவிந்தரராஜ பெருமாள் கோயிலில் குறிப்பிட்ட காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
கோயிலில் வார பூஜை, மாத பூஜை, வருட பூஜை நடத்தியதாகவும், இதற்காக அபிஷேக பொருள்கள், மாலை, அலங்கார பந்தல், அலங்கார விளக்குகள் அமைத்ததாகவும், பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்ததாகவும் போலி ஆவணங்கள் மூலம் 12 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அப்போதைய செயல் அலுவலரான சசிகலா மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம், இந்து சமய அறநிலையத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.