/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dharma puris444.jpg)
தர்மபுரியில் நான்காவதாக பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்ததால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள செம்மனஹள்ளி காந்தி நகரைச் சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மனைவி வனிதா (வயது 27). இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
மீண்டும் கர்ப்பமடைந்த வனிதாவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புபெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட தம்பதிக்கு நான்காவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில்தான், அண்மையில் பிறந்த அந்தப் பெண் குழந்தை, திங்கள்கிழமை (23.8.2021) மர்மமான முறையில் இறந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த பெலரம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முனிவேல், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தமிழ்நாடு அளவில், ஒருகாலத்தில் மதுரை, தேனி மாவட்டங்களுக்கு அடுத்து தர்மபுரி மாவட்டத்தில்தான் பெண் குழந்தைகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகளவில் நடந்துவந்தன. இந்நிலையில், நான்காவதாகவும் பெண் குழந்தை பிறந்த விரக்தியில் அந்தக் குழந்தை கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)