திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவரிடம் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்கத்துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டுவந்து நிறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும். ஆனால் அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது அராஜக போக்காகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும். ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது. ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என பொதுப்படையாகக் கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசையும், அமலாக்கத்துறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறினார்.