தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கும், அரசால் அனுப்பப்பட்ட கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 39 பேர் மீது பரிசீலனையில் உள்ளது. ஒருவரை விடுதலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையும் ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். அதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்ய ஆவணங்கள் குறைவாக உள்ளதாகக் கூறி ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.