அரசு வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரின்பேரில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளரை சேலம் மாவட்டக் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (28.11.2021) கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மணி என்கிற நடுப்பட்டி மணி. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக பணியாற்றிவந்தார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த குணசேகரன் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 28) என்பவர், கடந்த அக்டோபர் இறுதியில் சேலம் மாவட்ட காவல்துறை எஸ்பி ஸ்ரீஅபிநவ்விடம் நடுப்பட்டி மணி மீது ஒரு புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், ‘தான் பி.இ., படித்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நடுப்பட்டி மணி மற்றும் அவருடைய நண்பரும் அதிமுக பிரமுகருமான செல்வக்குமார் ஆகிய இருவரும் தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றனர்.
ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி அரசாங்க வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டபோது 4 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு மீதம் 13 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டனர்’ என்று கூறியிருந்தார்.
இந்தப் புகார் மீது சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் விசாரணை நடத்தினார். இதையடுத்து நடுப்பட்டி மணி, செல்வக்குமார் ஆகியோர் மீது மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தார்.
காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்ததை அறிந்த அவர்கள் இருவரும் முன்ஜாமின் கோரி, சேலம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உயர் நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தனர். அங்கேயும் அவர்களுடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, நடுப்பட்டி மணி, செல்வக்குமார் ஆகிய இருவரும் தலைமறைவாகினர். எனினும், அவர்களைப் பிடிக்க டி.எஸ்.பி. இளமுருகன் தலைமையிலான நான்கு தனிப்படை காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.
காவல்துறையினரின் துரத்தலை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட இருவரும் திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் பதுங்கியிருந்தனர்.
இந்த நிலையில்தான், ஞாயிற்றுக்கிழமை (28.11.2021) அதிகாலையில் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு நடுப்பட்டி மணி வந்திருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர், நடுப்பட்டி மணியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
காவல்துறையில் பிடிபட்டுள்ள நடுப்பட்டி மணி, தொடக்க காலத்தில் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலைசெய்துவந்துள்ளார். அங்கு முறைகேட்டில் ஈடுபட்டதன்பேரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமியின் ஆரம்பகால விசுவாசி என்பதால், தான் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அவரிடமே உதவியாளராக பணியில் சேர்ந்துகொண்டார்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் மணியின் ஆட்டம் ரொம்ப அதிகமாகவே இருந்துள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் வீட்டிலேயே இருப்பதால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நூறுக்கும் மேற்பட்டோரிடம் பணத்தை வாங்கிக் குவித்துள்ளதாகவும், அதுவே நான்கைந்து கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்கிறார்கள் இலைக்கட்சியினர்.
தற்போது நடுப்பட்டி மணி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் துணிச்சலாக முன்வந்து புகார் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது. இதற்கிடையே, தலைமறைவாக உள்ள மணியின் கூட்டாளி செல்வக்குமாரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.