பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது உடலானது ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேதப் பரிசோதனையானது தொடங்கியுள்ளது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் உடலானது நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது. அதன் பின்னராக நாளை மதியம் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாணி ஜெயராம் இறப்பு குறித்து சந்தேக மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், சுமார் 20 நிமிடம் அவரது வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
அண்மையில் மத்திய அரசின் பத்மபூஷன் விருதை அவர் பெற்றிருந்தார். இந்தநிலையில் அவர் உயிரிழந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநர் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது