சேலத்தில் அதிமுக நிர்வாகி இளங்கோவன் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பணம், தங்கம், வெள்ளி, சொகுசு வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
சேலம் புத்திரகவுண்டன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நள்ளிரவு 12 மணிவரை சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இந்த சோதனைக்கு அவரது ஆதரவாளர்கள், அதிமுகவினர் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததோடு தமிழ்நாடு அரசிற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். சேலத்தில் 22 இடங்கள், திருச்சியில் 6 இடங்கள், சென்னையில் 3 இடங்கள், நாமக்கல், கோவையில் தலா ஒரு இடம் என சோதனை நடைபெற்றது. கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றில் சட்டவிரோதமாக முதலீடு செய்து பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. 36 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 29.77 லட்சம் ரூபாய் பணம், 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி, பத்து சொகுசு கார்கள், 2 சொகுசு பேருந்துகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் 68 லட்சம் ரூபாய் வங்கி வைப்புத் தொகையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வீட்டில் சோதனை மட்டும் நடத்த வேண்டுமே தவிர அவர்களிடம் விசாரிக்க எந்த அதிகாரமும் இல்லை என அதிமுக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு தொடர உள்ளதாக அவர் கூறியுள்ளார். சேலம் புத்திரக்கவுண்டன்பாளையத்திற்கு வந்த இன்பதுரை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இளங்கோவன் தொலைபேசி மூலம் அழைத்ததால் வந்தேன். ஒரு ஸ்டேட்மென்ட் எழுதி வைத்து அதில் கையெழுத்து போடுங்க என வற்புறுத்துவது துன்புறுத்தலுக்குச் சமமானது. அது கோர்ட்டில் நிற்கப் போவதில்லை என்பது வேற விஷயம். அந்த உரிமையும் அதற்கான அதிகாரமும் இந்த அதிகாரிகளுக்கு இல்லை'' என்றார்.