திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ஒருவரை மடக்கி 21 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இளம்பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் மர்ம நபர்கள் பறித்துச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாவது வழக்கம். ஆனால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணை நடு ரோட்டில் மடக்கி இருசக்கர வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று பலவந்தமாகப் பெண் அணிந்திருந்த நகையைப் பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பும் காட்சியானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தாண்டவராயன் தெருவில் வசித்து வருபவர் ஈஸ்வரி. இவர் ஆரணி காந்தி மார்க்கெட் பகுதியில் நாட்டு மருந்துக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நாட்டு மருந்துக் கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் தாண்டவராயன் தெருவில் இருக்கும் அவருடைய வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது முகமூடி அணிந்துகொண்டு அவரை பின்தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் திடீரென ஈஸ்வரியின் இருசக்கர வாகனத்தினை முந்திச் சென்று அவரை வழிமறித்து நின்றனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் இறங்கி ஈஸ்வரியை நோக்கிச் சென்று பலவந்தமாக அவர் கழுத்திலிருந்த நகையைப் பறித்துக்கொண்டு இருந்து சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதுதொடர்பாகக் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது இந்தக் காட்சிகள் போலீசாரிடம் சிக்கியது. தற்போது கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.